Published : 17 Jun 2015 08:46 AM
Last Updated : 17 Jun 2015 08:46 AM

செம்மரக் கடத்தல் வழக்கில் கைதான வேலூர் கலால் டிஎஸ்பியிடம் 50 மணி நேரம் விசாரிக்க அனுமதி: ஆம்பூர் நீதிமன்றம் போலீஸுக்கு உத்தரவு

செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலுவை 50 மணி நேரம் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி ஆம்பூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு, செம்மரக் கடத்தல் வழக்கில் 3-வது நபராக சேர்க்கப் பட்டு இருந்தார். தலைமறைவாக இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், காட்பாடி அருகே கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, செம்மரக் கடத்தல் வழக்கில் டிஎஸ்பி தங்க வேலுவுடன் தொடர்பில் இருந்து, ஏற்கெனவே கைது செய்யப்பட்ட வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் அவரது மனைவி ஜோதிலட்சுமியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். செம்மரக் கடத்தல் விவகாரத்தில், டிஎஸ்பி தங்கவேலு கூறியதுபோல் தாங்கள் நடந்து கொண்டதாக அவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, டிஎஸ்பியிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்த ஆம்பூர் தாலுகா போலீஸார் ஆம்பூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். அதில், செம்மரக் கடத்தல் விவகாரம், பாமக பிரமுகர் சின்னபையன் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டியுள்ளதால் டிஎஸ்பி தங்கவேலுவை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டிருந்தனர்.

இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிஎஸ்பி தங்கவேலு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்பூர் நீதிமன்றத்துக்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டார். காலை 11.30 மணிக்கு மாஜிஸ்திரேட் ஆனந்தராஜ் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். டிஎஸ்பி தங்கவேலு சார்பாக 4 வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அரசு தரப்பில் ஒரு வழக்கறிஞர் ஆஜரானார்.

டிஎஸ்பி தங்கவேலுவிடம் போலீஸ் காவலில் 2 நாட்கள் (50 மணி நேரம்) விசாரணை நடத்த அனுமதி வழங்கியும், விசாரணை முடிந்து மீண்டும் ஜூன் 18-ம் தேதி (நாளை) பகல் 2.15 மணிக்கு ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மாஜிஸ்திரேட் ஆனந்தராஜ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டிஎஸ்பி தங்கவேலுவை ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

சட்டப்படி சந்திப்பேன்

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த டிஎஸ்பி தங்கவேலு, செய்தியாளர்களைப் பார்த்து கூறும்போது, ‘‘செம்மரக் கடத்தல் வழக்கில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், போலீஸாருடன் எனக்குத் தொடர்பு இருப்பதாக சிலர் சித்தரித்து எழுதுகின்றனர். இதில் உண்மை இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கை நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x