Published : 22 Jun 2015 07:15 AM
Last Updated : 22 Jun 2015 07:15 AM

உணவு உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்ப தீர்வுகள் தேவை: உலக உணவு ஆராய்ச்சி பரிசு பெற்ற விஞ்ஞானி பேச்சு

இந்தியாவில் உணவு உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்ப தீர்வுகள் தேவை என்று உலக உணவு ஆராய்ச்சி பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் சஞ்சய் ராஜாராம் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் சஞ்சய் ராஜாராம் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கோதுமை உற்பத்தியை பெருக்கு வதில் பெரும்பங்காற்றியவர். ‘மிஸ்டர். கோல்டன் கிரைன்’ (Mr.Golden Grain-The Life and Work of the Maharaja of the wheat) என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலை சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை வளாகத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை ‘இந்து’ என்.ராம் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் டாக்டர் சஞ்சய் ராஜாராம் பேசியதாவது:

2030-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.5 பில்லியனாக இருக்கும். ஆனால் நமது விளை நிலங்களின் அளவு அதிகரிக்காது. நகரமயமாக்கல் காரணமாக குறையலாம். எனவே, உணவு உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய தொழில்நுட்ப தீர்வுகளை கண்டறிய வேண்டும். நீர் மேலாண்மை, விதைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய என்.ராம் “சஞ்சய் ராஜாராம் கோதுமை உற்பத்தி அதிகரிப்பு என்ற ஒற்றை இலக்கை தீவிரமாக துரத்தி பிடித்துள்ளார். அவரது முயற்சியால் 500 புதிய கோதுமை ரகங்கள் கிடைத்துள்ளன.

ஆனால் அவர் இதை நினைத்து பெருமைப் படாமல், அவரது ஆராய்ச்சியால் எத்தனை பேர் பலனடைந்தனர் என்று தான் எண்ணிப் பார்க்கிறார்”என்றார்.

நூலை வெளியிட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் பேசும்போது, “உத்தர பிரதேசத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இன்று இவ்வளவு சாதித்துள்ளார். இந்த நூலில் அவரது ஆராய்ச்சிகள் மட்டுமல்லாமல், அவரது உன்னத குணங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பது நூலின் சிறப்பு அம்சமாகும். அவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு வித்திட்டிருக்கிறார்”என்றார்.

நூலாசிரியர் ஜி.வெங்கடரமணி, “வேளாண் விஞ்ஞானிகள் நார்மன் போர்லாக் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் பசுமைப் புரட்சியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றவர் டாக்டர் சஞ்சய் ராஜாராம். முதல் தலைமுறை படிப்பறிவு பெற்ற அவர், முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது அவரது கடின உழைப்புக்கு சாட்சி”என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x