Published : 01 Jun 2015 06:06 PM
Last Updated : 01 Jun 2015 06:06 PM

‘தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்’: பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

தக்கலையில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி எம்.ஆர். காந்தி, பொதுச்செயலாளர் குமரி ரமேஷ், பத்மநாபபுரம் நகரத் தலைவர் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சி ஊழல்மயமாக இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு வரை வங்கிகளின் பயன் சாதாரண மக்களை சென்றடையவில்லை. நரேந்திர மோடி பிரதமரான பின்பு புதிய வங்கி கணக்கு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் 15 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

வங்கி கணக்கு திட்டம், விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத் திட்டம் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட செல்வ மகள் சேமிப்புத் திட்டத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வியாபாரிகளை கந்துவட்டி கும்பலிடம் இருந்து மீட்க முத்ரா வங்கி திட்டம் வரவுள்ளது.

நஷ்டத்தில் இயங்கி வந்த சென்னை துறைமுகம், இந்த ஆண்டில் ரூ.5 கோடி லாபம் ஈட்டியுள்ளது. குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த முடியுமா? முடியாதா? என்பது இன்னும் 15 நாட்களில் தெரிந்துவிடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைக்க 400 ஏக்கர் இடம் தேவை. இது குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மது விற்பனை மூலம் மக்களை அடிமைப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x