Published : 08 Jun 2015 08:14 PM
Last Updated : 08 Jun 2015 08:14 PM

வேளாண்மை பட்டப்படிப்புக்கு இளைஞர்களிடம் வரவேற்பு: வேளாண்மைத் துறை இயக்குநர் தகவல்

வேளாண்மைப் பட்டப் படிப்பு தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் வேளாண்மைத் துறை இயக்குநர் எம்.ராஜேந்திரன்.

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து விவசாயத்தில் இளைஞர்கள் என்ற 2 நாள் பயிலரங்கு திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதனை தொடங்கி வைத்த தமிழக வேளாண்மைத் துறை இயக்குநர் எம்.ராஜேந்திரன் பேசும்போது, “வேளாண்மைப் பட்டப்படிப்பு தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இளைஞர்களிடம் இந்தப் படிப்புக்கு உள்ள வரவேற்பையே இதுகாட்டுகிறது. இளைஞர்களை அதிகம் கொண்ட இந்தியாவில் இது வரவேற்கத்தக்கது.

விவசாயிகள் தங்களது தொழிலை ஒருங்கிணைத்து செயல்படுத்தும்போது, அதிக லாபம் ஈட்டமுடியும்.

மதிப்புக் கூட்டுதலுடம் சந்தைத் தொழில்நுட்பமும் சேரும்போது, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் தங்களது விவசாயத் திட்டத்தை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தவேண்டும்” என்றார். இந்த பயிலரங்கில் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமி, தோட்டக்கலைத் துறை இயக்குநர் சித்திரசேனன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர்.

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய சிறப்பு அதிகாரி எம்.ஜவஹர்லால் வரவேற்றார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் அஜய் கே.பரிடா திட்ட விளக்கவுரையாற்றினார். அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி பரசுராமன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x