Published : 08 Jun 2015 10:44 AM
Last Updated : 08 Jun 2015 10:44 AM

மாநிலங்களுக்கு ஏற்றவாறு திறன் மேம்பாட்டு பயிற்சி: பிரகாஷ் சிங் பாதலுக்கு ஜெயலலிதா கடிதம்

மாநிலங்களுக்கு ஏற்றவாறு திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி திட்டங்களை வகுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திறன் மேம்பாடு குறித்த மாநில முதல்வர்கள் அடங்கிய துணைக் குழுவின் அமைப்பாளரும், பஞ்சாப் மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

சென்னையில் பல்வேறு பணிகள் இருப்பதால் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறும் நிதி ஆயோக் துணைக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற்ற இக்குழுவின் முதல் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சிக்கு திறன் மேம்பாடு மிகவும் அவசியமானதாகும். இதை உணர்ந்து திறன் மேம்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. துணைக் குழுவின் வரைவு அறிக்கையில், தமிழக அரசின் பல்வேறு ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சார்பில் மேலும் பல அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என விரும்புகிறேன்.

மாநிலத்துக்கு மாநிலம் தேவை களும் பிரச்சினைகளும் மாறுபடுகின்றன. எனவே, அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ற வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க வேண்டும். அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் மாநிலங்கள், அதிக தொழிலாளர்களை அனுப்பும் மாநிலங்கள் என வகைப்படுத்தி பயிற்சித் திட்டங்களை வகுக்க வேண்டும்.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு இடம் பெயரும் தொழிலாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதிக மக்கள் தொகையால் ஆதாயம் அடையும் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

முன்மாதிரி திட்டங்கள்

தமிழகத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டு, அவர்கள் மற்ற பணிகளில் கவனம் செலுத்த வழி ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சுயஉதவிக் குழுக்கள், புதுவாழ்வு திட்டம், உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் கிராம மக்களுக்கான வாழ்வாதார திட்டங்கள் ஆகியவை தமிழகத்தில் சிறப்பாக செயல் படுத்தப்படுகின்றன. புதுவாழ்வு திட்டம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய முன்னுதாரணமான திட்டமாகும்.

வரைவு அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

215 கல்லூரிகள்

தமிழகத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) மாணவர்களுக்கு இலவச பயிற்சியும், மாதாந்திர ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்கள் தனியார் ஐடிஐ-களில் படிக்கவும் உதவி செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 322 சமுதாயக் கல்லூரிகளில் தமிழகத்தில் மட்டும் 215 கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் 204 கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இக்கல்லூரிகள் மூலம் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 62 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரு கின்றன. இதுபோன்ற திட்டங்களை யும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நிதி ஆதாரங்களை திரட்டு வதற்கான திட்டங்களும், வழிமுறைகளும் திறன் மேம்பாட்டுக்கான துணைக் குழுவின் அறிக்கையில் இடம்பெற வேண் டும். மாநில நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x