Published : 15 Jun 2015 01:08 PM
Last Updated : 15 Jun 2015 01:08 PM

பெண்களை மதிக்காத சமூகம் நிச்சயம் திருநங்கைகளையும் மதிக்காது: கவிஞர் கல்கி வேதனை

பெண்களை மதிக்காத சமூகம் நிச்சயம் திருநங்கைகளையும் மதிக்காது. ஒருவகையில் பெண்களைவிட திருநங்கைகளுக்கு சுதந்திரம் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது என பொள்ளாச்சியில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் கவிஞரும் திருநங்கையுமான கல்கி பேசினார்.

பொள்ளாச்சியில் உள்ள 'தீ இனிது' இலக்கிய அமைப்பு சார்பில், நேற்று இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாரதிவாசன் எழுதிய 'இடைவெளி நிரப்பும் வனம்', 'யாதுமாகி நின்றவன்' ஆகிய கவிதைத் தொகுப்புகளை இரதிபாலா அறிமுகம் செய்து வைத்தார். பாரதிவாசன் ஏற்புரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, திருநங்கை கல்கி எழுதி சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட 'குறி அறுத்தேன்' கவிதைத் தொகுப்பை, செ.இளங்கோவன் அறிமுகம் செய்து பேசும்போது, 'திருநங்கையான கவிஞர் கல்கி எழுதியுள்ள முதல் கவிதைத் தொகுப்பு இந்த நூல். இதில் 'என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது; எனவே என்னால் குடும்ப அரசியல் செய்ய முடியாது' என்பது போன்ற வரிகள் இன்றைய சமூக, அரசியல் நிலைகளை உலுக்குபவையாக இருக்கின்றன.

தமிழ் இலக்கியத்திலும் சரி, தமிழ் மரபிலும் சரி அரவாணிகளின் பதிவு அதிகமாகவே உள்ளன. ஆனால், அவற்றை உலகமயமாக்கல் சூழல்களே வெளிக்கொண்டு வருகின்றன. எதிர்மறையான விசயங்கள் கூட சில சமயங்களில் நேர்மறையான விளைவுகளைத் தரும் என்பது இதில் தெளிவாகிறது. மூன்றாம் பாலினம் மீதான அறிவியல் ரீதியான, உணர்வுப் பூர்வமான பார்வை நமக்கு அவசியம்' என்றார்.

ஏற்புரையில் கவிஞர் கல்கி பேசும்போது, 'முகநூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதியவையே இந்த நூலில் உள்ள கவிதைகள். இதில் திருநங்கைகளின் சுதந்திரம் குறித்து சற்று ஆழமாக பேசியுள்ளேன்.

நமது சமூகச்சூழலில் திருநங்கைகள் என்றாலே பாலியல் சுரண்டல், போகப்பொருள் என்ற அடையாளமுமே துரத்துகின்றன. கொள்கை ரீதியான, சட்ட ரீதியான தீர்வுகள் கிடைத்தாலும், சரிசமமான சூழலுக்கு வர, மூன்றாம் பாலினத்தவர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைய சூழலில் பெண்ணுக்கு பொறுப்புகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. பெண்ணின் மகிழ்ச்சி, சுதந்திரம் அனைத்தும் தியாகம் என்பதில் முடக்கப்படுகின்றன. சமூக கட்டுப்பாடுகளை மீறி பெண் ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்றால் கூட கணவரின் அனுமதி தேவைப்படுகிறது. அந்த வகையில் நான் திருநங்கையாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

திருநங்கைகள் திருநங்கைகளாக இருப்பதே நல்லது. ஏனென்றால் பெண்களை விட திருநங்கைகளுக்கு சுதந்திரம் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது. பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை என்பது, அவளது உடல் மீதான பார்வையாகவே உள்ளது. பெண்களை மதிக்காத சமூகம் நிச்சயம் திருநங்கைகளையும் மதிக்காது. திருநங்கைகளுக்கு விரைவிலேயே சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்க இருக்கிறது. ஆனால் சமூக ரீதியான அங்கீகாரம் கிடைக்க வெகு நாட்கள் ஆகும்' என்றார்.

தீ இனிது இலக்கிய இயக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர் நன்றி கூறினார். செங்கவின், சோழநிலா உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x