Published : 08 Jun 2015 09:23 PM
Last Updated : 08 Jun 2015 09:23 PM

ரூ.98.88 கோடியில் தடுப்பணைகள், கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.98.88 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை, மேம்பாலம் மற்றும் புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.7 கோடியே 60 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்துவைத்தார்.

அரியலூர் மாவட்டம் அம்பலவார்கட்டளை - கண்டக்குடி சாலை மருதையாற்றின் குறுக்கே மேம்பாலம், கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் அருகில் கெடிலம் ஆறு, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் வட்டம் ஜவ்வாதுப்பட்டி புதூர் கிராம் அருகில் நங்காஞ்சியாறு, வேடசந்தூர் வட்டம் திருக்கூர்ணம் அருகில் குடகனாறு, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ராஜபுரம் கிராமம் அமராவதி ஆறு ஆகிய ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளையும் முதல்வர் திறந்துவைத்தார்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பார்த்திபனூர் நீரொழுங்கியின்கீழ் வைகை ஆற்றின் குறுக்கே குன்னப்பனேந்தல் கிராமம் அருகில் கட்டப்பட்ட தடுப்பணை மற்றும் வைகை ஆற்றின் குறுக்கில் போகலூர் ஒன்றியம் வலசை கிராமம் அருகில் நாட்டார் கீழ்நாட்டார் கால்வாய் மற்றும் 16 கண்மாய்கள் பாசன வசதிக்காக படுகை அணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

இவை தவிர, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் முறையூர் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை, தேனியில் தேனியாறு உப வடிநிலம், கொட்டக்குடி கிராமம் கொம்புதூக்கி அய்யனார் கோயில் அருகில் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை, அணைக்காரன்பட்டி கிராமம் சன்னாசிபுரம் சிற்றூர் அருகில் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கில் மற்றும் மேல் வைகை உபவடிநிலம் அம்மச்சியாபுரம் கிராமம் அருகில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

திருப்பூர் சாலைத்துறை கிராமத்தில் கட்டப்பட்ட தடுப்பணை, வேலூர் - சீவூர் கிராமத்தில் கவுண்டன்யா நதியின் கீழ்மட்ட நிலத்தடி தடுப்புச்சுவர்; தேனி மேல் வைகை உப வடிநிலத்தில் துரைசாமிபுரம் அணையில் இருந்து சக்கிலிச்சிகுளம் மற்றும் நல்லிடைச்சேரி கண்மாய்களுக்கு நீர் வழங்க புனரமைக்கப்பட்ட கால்வாய்கள் என மொத்தம் ரூ.97 கோடியே 74 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயில் கட்டப்பட்ட 11 தடுப்பணைகள், மேம்பாலம், கால்வாய்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

புதிய கட்டிடங்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சத்தியமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள நீர்வள ஆதாரத்துறையின் பிரிவு அலுவலக கட்டிடங்கள், நாகர்கோவிலில் நீர்வள ஆதாரத்துறை பிரிவு அலுவலகங்களுடன் கூடிய திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பு உபகோட்ட கட்டிடம், உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் கட்டப்பட்டுள்ள அலுவலர் குடியிருப்பு மற்றும் பிரிவு அலுவலகம், ஈரோடு நகரத்தில் அலுவலர் குடியிருப்பு, உதகையில் கட்டப்பட்டுள்ள நகரப்பிரிவு மற்றும் ராஜ்பவன் பிரிவு அலுவலகம், சிவகாசியில் ஆய்வு மாளிகை என ரூ.ஒரு கோடியே 14 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயில கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எம்.சி.சம்பத், எஸ்.சுந்தரராஜ், தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலர் நா.ச.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x