Published : 03 Jun 2015 04:17 PM
Last Updated : 03 Jun 2015 04:17 PM

மாணவர்கள் எண்ணிக்கை குறைவு: பொள்ளாச்சியில் 3 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

பொள்ளாச்சியில் மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைந்ததாகக் கூறி, இரண்டு நகராட்சி தொடக்கப் பள்ளிகளும், காரமடை பகுதி அரக்கடவு என்ற கிராமத்தில் ஒரு பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சியில், கோவை சாலையையொட்டி 1934-ல் நகராட்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. 80 ஆண்டுகள் பழமையான இப்பள்ளி, தற்போது மாணவர்கள் யாரும் இல்லை எனக் கூறி மூடப்பட்டுள்ளது. இதேபோல், 1973-ல் தொடங்கப்பட்ட பொள்ளாச்சி நகராட்சி அழகாபுரி வீதி தொடக்கப் பள்ளியும் மாணவர்கள் இல்லாததால் மூடப்படுகிறது.

இதுதொடர்பாக, பொள்ளாச்சி தெற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூம்பாவை கூறும்போது, “கோவை சாலையை ஒட்டியுள்ள நகராட்சிப் பள்ளியில், கடந்த கல்வி ஆண்டு 5 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். தலைமையாசிரியர், ஆசிரியர் ஒருவர் மட்டுமே பணிபுரிந்துள்ளனர்.

மாணவர்களில் மூன்று பேர் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வேறு பள்ளிக்கு மாறுதலாகிவிட்டானர். மீதமுள்ள இரண்டு பேரும், தங்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள வேறு பள்ளிக்கு மாறுதலாகிவிட்டனர். இதனால், பள்ளியில் மாணவர்களே இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே, பள்ளியை மூடிவிட்டோம்.

இதேபோல், அழகாபுரி வீதி பள்ளியில் 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அதில் இருவர் மாற்றுத்திறனாளிகள் என்பதால், வெங்கட்ரமணன் வீதி பள்ளியிலுள்ள பகல் நேர காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். மற்றொரு மாணவியை, அவரது பெற்றோர் வேறொரு பள்ளியில் சேர்த்துவிட்டனர். இதனால், அந்தப் பள்ளியும் மூடப்பட்டுவிட்டது.

பள்ளிகள் மூடப்பட்டவுடன், அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, பள்ளிக் கட்டிடம் நகராட்சி கட்டுப்பாட்டில் விடப்பட்டது. மீண்டும் தேவைப்படுகிறது என்ற கோரிக்கை வரும்போது, இந்தப் பள்ளிகள் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், காரமடை வட்டாரம் அரக்கடவு என்ற கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், இந்தக் கல்வி ஆண்டிலிருந்து மூடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு மாணவர்கள் யாரும் இல்லாததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், 5 பேருக்கு குறைவாக மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால் பள்ளிகளை தொடர்வது சிரமம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் மூடப்பட்டவுடன், அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, பள்ளிக் கட்டிடம் நகராட்சி கட்டுப்பாட்டில் விடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x