Published : 30 Jun 2015 07:33 PM
Last Updated : 30 Jun 2015 07:33 PM

ஆம்பூர் கலவரம்: தமிழக தலைவர்கள் மவுனம் சாதிப்பது ஏன்?- தமிழிசை சவுந்தரராஜன்

எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் தமிழக தலைவர்கள், ஆம்பூர் கலவரம் குறித்து குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வேலூர் மாவட்டம் ஆம்பூரில் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. இது கண்டனத்துக்குரியது. ஆனால், இதற்காக சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் இறங்கி ஆம்பூர் நகரத்தையே சூறையாடியிருப்பதை எந்தவகையிலும் ஏற்க முடியாது.

இந்த வன்முறையில் காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். கடைகள், மருத்துவமனைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. நிலைமையை ஆராய வந்த மாவட்ட ஆட்சியரை பாதுகாப்பதே பெரும்பாடாகியிருக்கிறது. தமிழகத்தில் காவல்துறையினருக்கு மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

அங்கு நடந்த கூட்டத்தில் ஆம்பூர் எம்எல்ஏ பேசிய பிறகுதான் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எனவே, வன்முறைக்கு அவரது பேச்சு காரணமா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் தமிழக தலைவர்கள், ஆம்பூர் கலவரம் குறித்து குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

ஆம்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்த என் மீது வழக்கு தொடரப்போவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார். எந்த வழக்கையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும். வேற்றுமைகள் வேரூன்றக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x