Published : 13 Jun 2015 10:16 AM
Last Updated : 13 Jun 2015 10:16 AM

தாமதமாக பணிகள் தொடங்கியதால் கிணறு காணவில்லை என்று சுவரொட்டி ஒட்டிய கிராம மக்கள்

செஞ்சி அருகே தாய் திட்டத்தின் கீழ் கிணறு தோண்டும் பணி காலதாமதமாக தொடங்கியதால் ‘கிணற்றை காணவில்லை’ என கிராம மக்கள் சுவரொட்டிகளை ஒட்டினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த களையூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக 2013 2014 நிதி ஆண்டில் தாய் திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் மதிப்பில் கிணறு வெட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால், அந்தப் பணி நீண்ட கால மாக நடைபெறவில்லை. தற்போது தான், பணி தொடங்கியது.

இந்த நிலையில், களையூர் கிராம மக்கள் சார்பாக செஞ்சி முழுவதும் நேற்று சுவரொட்டி ஒட்டப் பட்டிருந்தது. அதில், ‘களையூர் கிராமத்தில் 2013 2014 நிதி ஆண்டில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் வெட்டப்பட்ட குடிநீர் கிணற்றை காணவில்லை. அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது. கீழ் பகுதியில், ‘இங்ஙனம் கிராம பொதுமக்கள், களையூர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் காண்டீபனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “கிணறு வெட்டும் டெண்டர் எடுத்த ஒப்பந்த தாரர் மெதுவாக பணிகளை செய்து வருகிறார். கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இந்த பணி நிறைவு பெற்றால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். பணி முடிவதற்கு காலதாமதமாகி வருவ தால் கிராம மக்களில் யாரோ சிலர் இப்படி சுவரொட்டியை ஒட்டியுள் ளனர். மேலும், 2014-15 நிதியாண்டு பணியை 2013-14 என தவறாக குறிப்பிட்டுள்ளனர்” என்றார்

இது தொடர்பாக வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, “தாய் திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெறுகிறது. பணி மந்தமாக நடைபெறுவது குறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணி முடிந்து விடும். கிணற்றை காணவில்லை என ஒட்டியது ஏன் என்று புரியவில்லை” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x