Published : 24 Jun 2015 07:26 AM
Last Updated : 24 Jun 2015 07:26 AM

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்: 9.5 கி.மீ. தூரத்தை 17 நிமிடங்களில் சென்றடையும்

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 9.5 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடங்களில் சென்றடையும்.

சென்னையில் விரைவில் தொடங்க உள்ள மெட்ரோ ரயில் சேவைக்காக கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை மற்றும் பணிமனையை பத்திரிகையாளர்களுக்கு நேற்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் சுற்றிக் காண்பித்தனர். பின்னர், இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் (உயர்மட்ட பாதை) டி.அர்ஜூனன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்வழித் தடத்தில் அடுத்த மாதம் ரயில் சேவையை தொடங்குவதற்காக 9 ரயில்கள் பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வழித் தடத்தில் 10 முதல் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். 80 கி.மீ. வேகம் வரை இவ்வழித்தடத்தில் ரயில்களை இயக்க முடியும். ஆனால், 40 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 9.5 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடங்களில் சென்றடையும்.

ரயில்களின் இயக்கத்தைக் கண்காணிப்பதற்காக கோயம் பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தின் 3-வது மாடியில் நவீன தொழில்நுட்பத்தில் செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒட்டுமொத்த ரயில்களின் இயக்கத்தையும் கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும். இதற்காக, அதிநவீன கணினிகள் பொருத்தப் பட்டுள்ளன. ரயில் நிலையத்திலோ அல்லது ரயில் பாதையிலோ ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்படும். இதற்காக, ‘எமர்ஜென்சி டிரிப்பிங் ஸ்விட்ச்’ அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரயில் நிலையங்களை ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடியும்.இதேபோல், பணிமனை கட்டுப்பாட்டு மையமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்களை பராமரிப்பதற்காக 66 ஏக்கர் பரப்பளவில் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாட்டிலேயே முதன்முறையாக ஜல்லி பயன்படுத்தாமல் கான்கிரீட் மூலம் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிமனையில் ஒரே நேரத்தில் 42 ரயில்களை நிறுத்தி பராமரிக்க முடியும். தற்போது 25 ரயில்கள் இங்கு உள்ளன. ரயில்களை இயக்கி சோதித்துப் பார்ப்பதற்காக 800 மீட்டர் நீளத்துக்கு சோதனை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் பெட்டிகளை இயந்திரம் மூலம் சுத்தப்படுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். ஒரு ரயிலில் ஒரே சமயத்தில் ஆயிரத்து 276 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

இவ்வாறு அர்ஜூனன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x