Published : 08 Jun 2015 11:11 AM
Last Updated : 08 Jun 2015 11:11 AM

இயற்கை எழில் நிறைந்த குமரி மாவட்டத்தை மீண்டும் அச்சுறுத்தும் பிளாஸ்டிக்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கடந்த 2010-ம் ஆண்டு கன்னியா குமரி மாவட்டத்தை தமிழகமே திரும்பி பார்த்து ஆச்சர்யப்பட்டது. தமிழகத்தில் முதன்முறையாக 20 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கப், பைகள் தடை செய்யப்பட்ட மாவட்டமாக கன்னியாகுமரி அறிவிக்கப்பட்டதே இதற்கு காரணம்.

2010-க்கு முன்பு ஒருசில உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே பிளாஸ்டிக்குக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டன. பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக முதன்முதலில் கன்னியாகுமரியே அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுவாகவே பிளாஸ்டிக் பொருட்கள் மட்காத தன்மை கொண்டவை. அதிலும் 20 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள கேரி பேக், டீ கப் போன்றவை மறுசுழற்சி செய்ய முடியாதவை. இவை பயன்பாட்டுக்கு பிறகு வீதிகளில் வீசி எறியப்படுகின்றன. விவசாய நிலங்களில் சேர்ந்து மட்கிப் போகாமல் மண் வளத்தை கெடுத்து விடுகின்றன. கால்நடை கள் இவற்றை சாப்பிடுவதால் உயிரிழக்கின்றன.

இதற்கெல்லாம் மாற்றாக இந்த கழிவை எரித்து விட்டால்? அதிலிருந்து எழும் கரும்புகை சுகாதார சீர்கேட்டுக்கு வகை செய்வதோடு, ஓசோன் மண்டலத்துக்கும் அபாயம் விளைவிக்கிறது. இந்த காரணங் களினாலே 20 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு பல நாடுகளும் தடை விதித்துள்ளன.

கட்டுக்குள் இருந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2010-ல் ராஜேந்திர ரத்னூ ஆட்சி யராக இருந்தபோது, மாவட்டம் முழுவதிலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த தொடர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ‘நெகிழி’ (பிளாஸ் டிக்) பயன்பாடு இல்லாத மாவட்ட மாக கன்னியாகுமரி அறிவிக்கப்பட்டது. சுற்றுச் சூழலுக்கு எமனாக திகழ்ந்த பிளாஸ்டிக் கேரி பேக், கப் போன்றவற்றின் பயன்பாடு முற்றிலுமாக நின்று போனது.

ஆனால் தற்போது கன்னியா குமரி மாவட்டத்தில் மீண்டும் பிளாஸ்டிக் அரக்கன் தலை தூக்கியு ள்ளது. ராஜேந்திர ரத்னூவுக்கு பின்பு வந்த ஆட்சியர்கள் பிளாஸ்டிக் விஷயத்தில் உள்ள தடை நடைமுறைகளை கண்டுகொள்ளவில்லை.

இதன் விளைவு ஒளித்து வைத்து கேரி பேக் விற்ற கடைக்காரர்கள் தற்போது வெளிப்படையாகவே விற்க ஆரம்பித்துள்ளனர். கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம் என இயற்கை எழில் கொஞ்சும் இம்மாவட்டத்தில் மீண்டும் பிளாஸ்டிக் அரக்கன் தலைதூக்கி இருப்பது சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது.

மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்

பிளாஸ்டிக் மீண்டும் தலை தூக்குவது குறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “2010-ம் ஆண்டுக்கு முன்பு பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கே 20 மைரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் சட்டத்தில் அளவு கடந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைவது மட்டுமே இனி பிளாஸ்டிக் ஒழிப்பை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x