Published : 05 Jun 2015 08:14 AM
Last Updated : 05 Jun 2015 08:14 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் நரிக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர், உடலில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சையெடுப்போர், ஜோசியம் பார்ப்போர் என நாடோடி வாழ்க்கை நடத்தி வரும் குடும்பங்களுக்கு நிரந்தர வசிப்பிடம் மற்றும் அடிப்படை தேவைகளை ஏற்படுத்தித் தரும் நடவடிக்கையில் வருவாய்த் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், அத்தகைய குடும் பங்களில் உள்ள குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
திருவள்ளூர் சிறார்கள் பிச்சை எடுப்பதை தடுப்பது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அறிவுரை குழுமக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி வட்டங்களில் முதற்கட்ட ஆய்வை நடத்தின.
அந்த ஆய்வில், திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பெரிய குப்பம், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் பாக்கம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அம்மணம் பாக்கம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் முந்திரிதோப்பு, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனுப்பம்பட்டு ஆகிய இடங் களில் நரிக்குறவர் இன மக்கள், உடலில் சாட்டை அடித்து பிச்சையெடுப்போர், பூம்பூம் மாட்டுக்காரர்கள், ஜோசியம் பார்ப்போர் என 243 குடும்பங்கள் வசித்து வருவது தெரியவந்தது.
அந்த குடும்பங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட சிறார்கள் பிச்சை எடுத்தல் மற்றும் ஜோசியம் பார்த்தல், சிறுபொருட்கள் விற்பனை செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுத்தப்பட்டதும் ஆய்வில் தெரியவந்தது.
நாடோடி வாழ்க்கை நடத்திவரும் நரிக்குறவர் இன மக்கள், பூம்பூம் மாட்டுக்கார்கள் உள்ளிட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வசிப்பிடம் மற்றும் நிரந்தர வருவாய் ஈட்டும் வகையில் சுயதொழில் தொடங்க கடனுதவி அளிக்கவும், சிறார்களை பள்ளிகளில் சேர்க்கவும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்துக் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தக் குடும்பங்களுக்கு புன்னப்பாக்கம், அம்மணம் பாக்கம், பாக்கம், முந்திரிதோப்பு, அனுப்பம்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தர வசிப்பிடங்கள் அளிக்கும் பணியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பணி இன்னும் 3 மாதங் களில் முடிவுக்கு வந்த பிறகு, சம்பந்தப்பட்ட இடங்களில் குடியிருப்புகள் கட்டும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை மேற்கொள்ளும் என, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வட்டாரம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT