Published : 25 Jun 2015 09:54 AM
Last Updated : 25 Jun 2015 09:54 AM

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று மகா அபிஷேகம் மற்றும் ஆனித் திரு மஞ்சன தரிசனம் நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோயி லில் ஆனித் திருமஞ்சன உற்சவ திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்கள் நிலையை அடைந்ததும் நடராஜர், சிவகாம சுந்தரி உள்ளிட்ட சாமிகள் எடுத்து வரப்பட்டு கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அதன்பிறகு, நடராஜருக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று (24-ம் தேதி) அதிகாலை மகா அபிஷேகம் நடந்தது. குடம், குடமாக பால், தயிர், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் ஆகியவை கொண்டு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, காலை 10 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு கட்சி அளித்தனர். பிற்பகல் 3 மணிக்கு தரிசன விழா நடந்தது.

இதையடுத்து, ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வேத, மந்திரங்கள் முழங்க நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் ஆடி அசைந்து நடனமாடிய படியே காட்சி அளித்தவாறு சித்சபைக்கு சென்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசன விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நகரில் வெளிநாடு, வெளி மாநில பக்தர்களும் ஏராளமாக திரண்டிருந்தனர். ஆனித் திருமஞ்சன உற்சவத்தில் இன்று (25-ம் தேதி) இரவு முத்து பல்லக்கு வீதியுலா நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x