Published : 13 Mar 2014 12:30 PM
Last Updated : 13 Mar 2014 12:30 PM
மக்களவைத் தேர்தலில் எங்களின் பங்கு நிச்சயம் இருக்கும் என்று திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் மு.க.அழகிரி வியாழக்கிழமை சந்தித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் எங்களின் பங்கு நிச்சயமாக இருக்கும். ஆனால், அது எந்த வகையில் என்பதை இப்போது கூற முடியாது. அதுதொடர்பாக ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன். இந்த தேர்தலில் எங்கள் ஆதரவாளர்கள் யாரும் போட்டியிடப் போவதில்லை.
எதுவாக இருந்தாலும் நான் ஒருவனாக மட்டும் தேர்தலில் பங்கெடுக்க மாட்டேன். எனது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பளிப்பேன்.
சிலர், இதை செய்வதற்காக பொதுக்குழு, செயற்குழு என்ற பெயரில் கூட்டம் நடத்தி, பிறகு தாமே முடிவு எடுத்துக் கொள்வார்கள். ஆனால், நான் அப்படி இல்லை.
இன்று பிரதமரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். அவருக்கு கீழ் நான்கு ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றி நாட்டிற்கு பல நல்லவற்றைச் செய்திருந்தோம். அதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி சொல்வதற்காக பிரதமரை சந்தித்தேன்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பது எங்கள் நீண்ட நாள் கோரிக்கை. இது குறித்தும் பிரதமரிடம் மனு அளித்துள்ளேன். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் கேட்டு விட்டு முடிவு செய்வதாகக் கூறினார்.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்படாமல் போனதற்கு பிரதமர் வருத்தம் தெரிவித்தார். புதிய கட்சி தொடங்குவது குறித்து இரண்டு மாதங்கள் கழித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பேன். இவ்வாறு அழகிரி கூறினார். பிரதமருடனான சந்திப்பின்போது அழகிரியுடன் அவரது ஆதரவாளரும், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.ராமலிங்கமும் சென்றார்.
பாஜக வேட்பாளர்களுக்கு அழகிரி ஆதரவு?
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை மு.க.அழகிரி புதன்கிழமை இரவு ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக ராஜ்நாத் சிங்கிடம் அழகிரி உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கடந்த புதன்கிழமை டெல்லி வந்தார். அன்று இரவு அசோகா சாலையில் உள்ள பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் வீட்டுக்கு அழகிரி சென்றார்.
இது குறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் பாஜக தலைமை நிர்வாக வட்டாரம் கூறுகையில், “நாங்கள் சிறிதும் எதிர்பாராத வகையில் அவராகவே நேரில் வந்து ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அப்போது, மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக தானாகவே முன் வந்து தெரிவித்தார்” என்றனர். தனது ஆதரவைப் பெற மூன்று நிபந்தனைகளை பாஜக ஏற்க வேண்டும்.
அப்போதுதான் தனது ஆதரவு தொடர்பான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிடுவேன் என்று அழகிரி கூறியதாகத் தெரிகிறது. ஆனால், அந்த நிபந்தனைகள் குறித்த தகவலைக் கூற பாஜக நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். இந்த தேர்தலுக்குப் பிறகு புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக ராஜ்நாத்திடம் தெரிவித்த அழகிரி, பிற கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை என்பதையும் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT