Published : 13 Jun 2015 08:43 AM
Last Updated : 13 Jun 2015 08:43 AM
‘பீட்டர் அல்போன்ஸும் சுதர்சனமும் தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரவிடாமல் தடுத்து விட்டார்கள்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
இதுகுறித்து ’தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
கம்யூனிஸ்டுகளுக்கு உள்ள துணிச்சல்கூட இல்லாமல்தான் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டதாக விமர்சிக்கப்படுகிறதே?
தேர்தல் நாணயமாக நடக்காது என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக-வே, ‘தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கும்’ என்கி றது. தேர்தல் ஆணையத்தை கையில் வைத்திருக்கிற அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குவதன் மர்மம் புரியவில்லை. இப்படியான சூழ லில் கேலிக்கூத்தாக நடத்தப்படும் தேர்தலில் போட்டியிட்டு கோமாளி களாக வேண்டாம் என்பதால் நாங்கள் ஒதுங்கிவிட்டோம்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிதான் என்கிறாரே தமிழருவி மணியன்?
அவர் ஆண்டுக்கு ஒருவரை ‘முதல்வராக்குவேன்’ என்பார். ‘வைகோ தான் அடுத்த முதல்வர்’ என்றவர்தான் இப்போது ‘அதிமுக ஆட்சி’ என்கிறார். இன்னும் கொஞ்ச நாள் போனால் ‘திருமாவள வன்தான் அடுத்த முதல்வர்’ என்பார். எனவே, அவர் சொல்வதை எல்லாம் நான் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்காக திருமாவளவன் புதிய களம் அமைத்து வருகிறாரே?
கூட்டணி ஆட்சி வரவேண்டும் என்பதை நாங்கள் முழுமனதோடு வரவேற்கிறோம்.
2006-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு தயாராய் இருந்தார் கருணாநிதி. ஆனால், அதற்கு காங்கிரஸ் உரிய அழுத்தம் கொடுக்க வில்லை என்கிறாரே பீட்டர் அல்போன்ஸ்?
கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் முயற்சித்தது உண்மை. பீட்டர் அல்போன்ஸும் சுதர்சனமும்தான் கூட்டணி ஆட்சி அமையவிடாமல் தடுத்துவிட்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ‘திமுக-வுக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். அதற்கும் அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கள் தடையாக இருந்துவிட்டார்கள். அப்போது என்ன நடந்தது என்பது பீட்டருக்கே தெரியும்.
கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று சொன்ன பாஜக, கருப்புப் பணத்தை மீட்க எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லையே?
அதற்காகத்தானே இந்தியர்கள் அனைவரையும் வங்கிக் கணக் குத் தொடங்கச் சொல்லி இருக் கிறார்கள். கணக்குகள் தொடங்கி யதும் ஒவ்வொருவருக்கும் நிச்ச யமாக 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும். சொன்னதைச் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட பிரதமர் மோடி அவர்கள் இதையும் செய்து முடிப்பார் என் பதை இந்திய மக்கள் உறுதியாக நம்பலாம்.
காங்கிரஸ் ஆட்சி ஊழலால் வீழ்ந்தது. எங்கள் ஆட்சியில் கடந்த ஓராண்டாக எந்த ஊழலும் நடக்க வில்லை என்கிறதே பாஜக?
நான்கைந்து குபேரர்களுக்காக மட்டுமே ஆட்சி நடத்தும் பாஜக, கேரளாவில் துறைமுகம் அமைப்பதற்கு அக் கட்சியின் முக்கியப் புள்ளியான அதானிக்கு ஒற்றை டெண்டர் மூலம் அனுமதி கொடுத்திருக்கிறது. இது ஊழல் இல்லாமல் என்னவாம்? பங்காரு லட்சுமணன் கட்டுக்கட்டாய் பணம் வாங்கி அடுக்கிய வீடியோவை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைக்கிறார்கள் போலிருக்கிறது.
அதிமுக ஆட்சி மீது நீங்கள் தொடர்ச் சியாக குற்றச்சாட்டுகளை அடுக்கும் அதேநேரம் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதே?
ஒரே ஒரு அமைச்சர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து அவருக்கு ஜெயிலுக்குள் அனைத்துவிதமான வசதிகளையும் செய்து கொடுத்து ஜாமீனில் விடுதலை செய்திருப்பது கண்துடைப்பு நாடகம். முதல்வர் தொடங்கி அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பது மக்களுக்குத் தெரியும். எனவே, ஒட்டுமொத்த அமைச்சரவையே கலைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வதில் காங்கிரஸின் பின்புலம் இருப்பதாக சொல்லப்படுகிறதே?
ரெண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை சிறைக்கு அனுப்பி தண்டிக்கும்போது கோடிக் கணக்கில் ஊழல் செய்தவர்களை தண்டிக்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம்? ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருப்பதால் சட்ட ரீதியாக மேல் முறையீடு செய்வதுதான் சரி. அதைத்தான் கர்நாடக அரசும் செய்யப்போகிறது. இதில் காங்கிரஸுக்கு எந்தத் தொடர் பும் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை.
உங்களுக்கும் கார்த்தி சிதம்பரத்துக் கும் இடையில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுகமாகிவிட்டீர்களா?
எனக்கும் கார்த்தி சிதம்பரத்துக் கும் எந்தப் பிரச்சினையும் இல்லை; பிரச்சினை வரவும் வாய்ப்பில்லை. சில நேரங்களில் சில சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதை எல் லாம் நான் பெரிதுபடுத்திக் கொண்டிருப்பதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT