Published : 25 Jun 2015 10:00 AM
Last Updated : 25 Jun 2015 10:00 AM

திருப்பதியில் துப்பாக்கி சூடுக்கு முன் நடந்தது என்ன? - சாட்சிகளிடம் ஆந்திர ஐ.ஜி. ரகசிய விசாரணை: தடயவியல் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என தகவல்

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சிகளிடம் ஆந்திர சிறப்பு புலனாய்வுக் குழு ஐ.ஜி. ரகசிய விசாரணை மேற்கொண்டார்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகக் கூறி, தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர சிறப்பு போலீஸார், கடந்த ஏப். 7-ம் தேதி சுட்டுக் கொன்றனர். பஸ்ஸில் பயணம் செய்த கூலித் தொழிலாளர்களை பிடித்துச் சென்று ஆந்திர சிறப்பு போலீஸார் சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரிப்பதற்காக ஐ.ஜி. ரவிசங்கர் அய்யனார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை ஆந்திர அரசு அமைத்தது.

இதற்கிடையே, திருவண்ணா மலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள புதூரை சேர்ந்த சேகர் (55), மேல்கணவாய்னூரை சேர்ந்த இளங்கோ (22), தருமபுரி மாவட்டம் சித்தேரியைச் சேர்ந்த வரும், துப்பாக்கிச் சூட்டில் பலி யான ஹரிகிருஷ்ணனின் மகனுமான பாலச்சந்தர் (29) ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணை யம் முன் ஆஜராகி, ஆந்திர போலீ ஸார் தமிழர்களை பேருந்தில் இருந்து பிடித்துச் சென்றதை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்தனர். அதன்பின் மூவரும் மதுரை மக்கள் கண்காணிப் பகத்தின் பாதுகாப்பில் தங்கவைக் கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக ஆந்திர சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விமானம் மூலம் நேற்று முன்தினம் மதுரை வந்தனர். சாட்சிகளை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர் படுத்திய மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேனி டம் முதல் நாளில் விசாரணை நடத்தினர். 2-ம் நாள் விசாரணை, சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரான ஐ.ஜி. ரவிசங்கர் அய்யனார் தலைமையில் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

அவரிடம், சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு முன் தமிழக கூலித்தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் பஸ்ஸிலிருந்து பிடித்துச் சென்ற விவரங்களை இளங்கோ, சேகர், பாலச்சந்தர் ஆகியோர் விளக்கிக் கூறினர். அதில் ஏற் பட்ட சந்தேகங்கள் குறித்து மூவரிடமும் ஐ.ஜி. தனித்தனியாக ரகசிய விசாரணை மேற்கொண்டார்.

இதுபற்றி ஐ.ஜி. ரவிசங்கர் அய் யனார் கூறும்போது, ‘‘தமிழக தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்ற ஆந்திர போலீஸார் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. இங்குள்ள முக் கிய சாட்சிகளிடம் விசாரிக்கப் பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண் டும் விசாரிப்போம். தடய அறிவி யல் அறிக்கை, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுக்கான பகுப்பாய்வு அறிக்கை உள்ளிட்ட ஆய்வு அறிக் கைகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அதேபோல் சாட்சி யங்கள் அளிக்கும் தகவல்களை முழுமையாக விசாரித்து உறுதி செய்ய வேண்டி இருப்பதால் இன்னும் சில காலம் தேவைப்படும்’’ என்றார்.

சாட்சிகளுக்கு பாதுகாப்பு

மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் செய்தியாளர்களிடம் கூறும்போது, விசாரணை திருப்தியாக உள்ளது. கொல்லப்பட்ட 20 தமிழர்களின் செல்போன் எண்களை அவர்களிடம் அளித்துள்ளோம்.

சம்பவ நாட்களில் இவை எந்தெந்த பகுதியில் இருந்தன, அழைப்புகளின் நேர விவரம் போன்றவற்றை வைத்து விசாரிக்குமாறு தெரிவித்தோம். தற்போது எங்கள் பாதுகாப்பில் உள்ள 3 முக்கிய சாட்சிகளுக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x