Published : 23 Jun 2015 07:43 AM
Last Updated : 23 Jun 2015 07:43 AM

லலித் மோடியின் பின்னணியில் மத்திய அரசு: பிருந்தா காரத் குற்றச்சாட்டு

`பிரதமர் நரேந்திர மோடி டெல்லி ராஜபாதையில் நடத்திய சாதனை யோகா நிகழ்ச்சியில் லலித் மோடியின் நிழல் படிந்திருந்தது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக்கான சங்கத்தின் 2-வது மாநில மாநாடு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்த பிருந்தா காரத், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

`பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் 37 ஆயிரம் பேருடன் உலக சாதனைக்காக யோகா செய்துள்ளார். உலக சாதனையை பற்றிதான் அவர்கள் கவலைப்படுகின்றனர். ஏழைகளை பற்றி கவலைப்படுவதில்லை.

இந்த உலக சாதனை யோகா நிகழ்ச்சியில், லலித் மோடியின் நிழல் படிந்துள்ளது. இந்திய சட்டப்படி தேடும் குற்றவாளியான லலித் மோடிக்கு, நரேந்திர மோடி அரசின் மூத்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்பட வேண்டிய லலித் மோடிக்கு உதவி செய்த சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோர் உடனே பதவி விலக வேண்டும். அரசு வெளிப்படையாகவோ, ஊழலற்ற தாகவோ இல்லை. இந்த அரசு வெளிப்படையான, ஊழலற்ற அரசு என நரேந்திர மோடி கூறும்போதெல்லாம், லலித் மோடி முன்னால் நின்று சிரிக்கிறார்.

வரும் ஜூலை மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் லலித் மோடி விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும்.

பொருளாதார மாற்றம்

நாட்டில் பொருளாதார மாற்றத்தை கொண்டு வருவோம் என நரேந்திர மோடி கூறினார். ஆனால், எந்த மாற்றமும் வரவில்லை. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தற்போதைய பாஜக அரசும் ஒரே அளவில்தான் உள்ளன. எந்த அரசாக இருந்தாலும் தவறுகளை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டும். பாஜக அரசு மக்கள் விரோத போக்கை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஊரக வேலை திட்டம்

வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை அகில இந்திய அளவில் கிராமப்புற நெருக்கடியை போக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தும். நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் பணிகளை பாஜக அரசு செய்கிறது.

100 நாள் வேலை திட்டத்தில் ரூ. 183 ஊதியத்துக்கு பதில் ரூ. 120 மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதுவும் கடந்த 6 மாதமாக சரியாக வேலை வழங்கவில்லை என தொழிலாளர்கள் கூறுகின்றனர். உலகம் சுற்றும் பிரதமர் நரேந்திர மோடியும், அமைச்சர்களும் கிராமங்களுக்கு வந்து 100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடங்களை பார்வையிட வேண்டும். அப்போதுதான் தொழிலாளர்களின் கஷ்டம் அவர்களுக்கு புரியும்’ என்றார் பிருந்தா காரத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x