Published : 02 Jun 2015 05:06 PM
Last Updated : 02 Jun 2015 05:06 PM

நெல்லை - தேவாலய கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைப்பது எப்போது?

திருநெல்வேலி சேவியர் காலனியில் தேவாலயம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தமிழர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனிடம் நேற்று மனு அளித்தனர்.

திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நிகழ்ச்சியின்போது தமிழர் அமைப்புகளை சேர்ந்த கண்மணிமாவீரன், அ.வியனரசு, ஆ.முத்துப்பாண்டியன், மணிதே வேந்திரன் உள்ளிட்டோர் அளித்த மனு:

சேவியர் காலனியில் ஆலய மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரத்தில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர், பொறியியல் தொழில்நுட்ப அலுவலர்கள் ஆகியோர் தங்கள் கடமையிலிருந்து தவறியி ருக்கிறார்கள். ஆலய நிர்வாகிகள், கட்டுமானப் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களுடன், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு சென்னை மவுலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் உயிரிழந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை அரசு வழங்கியதுபோல், ஆலய மேற்கூரை இடிந்த விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழகநேரி மடை பழுது

திருநெல்வேலி கால்வாய் அழகநேரி பாசன விவசாயிகள் எம். சுடலைமுத்து என்பவர் தலைமையில் அளித்த மனு:

திருநெல்வேலி கால்வாய் அழகநேரி 5-ம் நம்பர் மடை மூலம் பாசனம் பெறும் புறக்கால் மடை கடந்த 10 ஆண்டுகளாக இடிந்திருக்கிறது. இதனால் 250 ஏக்கர் நன்செய் நிலத்துக்கு பாசன வசதி கிடைக்கவில்லை. மடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேட்டை பள்ளி சீராகுமா?

திருநெல்வேலி பேட்டை பகுதி தேமுதிக துணைச் செயலாளர் எஸ். ராஜாகனி அளித்த மனு:

பேட்டையில் 48-வது வார்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. பள்ளிக்கு சுண்ணாம்பு பூசி பல ஆண்டுகள் ஆகிறது. குடிநீர் தொட்டி மின்மோட்டார் பழுத டைந்திருக்கிறது. கட்டிடத்தின் மேல்பகுதியில் மரம் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது.

இதனால், இப்பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் தயங்குகிறார்கள். எனவே, பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குண்டு குழி சாலைகள்

ஆம் ஆத்மி கட்சியினர் சி.எம்.ராகவன் தலைமையில் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை, மாநில நிர்வாகத்தில் உள்ள சாலைகள், மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியங்கள், கிராமங்களில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இருக்கின்றன. திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகர், மேலப்பாளையம், தச்சநல்லூர், திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை சித்த மருத்துவமனை, திருநெல் வேலி டவுன், பேட்டை, பழையபேட்டை பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக சேதமடைந்திருக்கின்றன. இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்துக்கு எதிர்ப்பு

சங்கரன்கோவில் வட்டம் மூவிருந்தாளி பகுதியை சேர்ந்த வர்கள் அளித்த மனு:

மூவிருந்தாளி கிராமத்தில் அருள்மிகு பெரியநாயகம் கோயில் வளாகத்தில் அரசு அலுவலகம் கட்டுவதற்கு அதிகாரிகள் முயற்சி செய்வதாக அறிகிறோம். சரித்திரப் புகழ்வாய்ந்த இக்கோயிலில் அரசு அலுவலகம் கட்டுவது பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே, அத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஏ. கதிரேசன் தலைமையில் அளித்த மனுவில், ஆவுடையானூர் ஊராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x