Published : 15 Jun 2015 08:09 AM
Last Updated : 15 Jun 2015 08:09 AM

கல்லூரிகளிலும் யோகா: பாமக தலைவர் வலியுறுத்தல்

மத்திய அரசுப் பள்ளிகளில் யோகா திட்டம் கொண்டு வரப்பட்டதைப் போல், கல்லூரிகளுக்கும் அதனை விரிவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்தார்.

கோவையில் நேற்று செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி: பாமகவின் கொங்கு மண்டல மாநாட்டைத் தொடர்ந்து, ஜூலை 26-ம் தேதி வேலூரிலும், ஆகஸ்ட் 9-ம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 23-ம் தேதி விழுப்புரத்திலும் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.

மேட்டூர் அணை திறக்கப்படாததால் 12 மாவட்ட விவசாயிகள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்து 7 ஆண்டு களுக்கு மேலாகியும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் படாமல் இருப்பது மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதைக் காட்டுகிறது.

தமிழக காவல்துறையில் அரசியல் தலையீடு இருப்பதன் காரணமாகவே சட்டம் ஒழங்கு பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசுப் பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ள யோகா திட்டத்தை பாமக வரவேற்கிறது. அதனை கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மக்கள் நலத்திட்டங்களை அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று தொடங்கி வைப்பதே வழக்கமான ஒன்று. ஆனால், அந்த விதிகள் கடைபிடிக்கப்படாமல், தற்போது அரசுத் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x