Published : 01 Jun 2015 07:28 AM
Last Updated : 01 Jun 2015 07:28 AM

புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி? - பிரம்மகுமாரிகள் இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரம்

புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபடுவது பற்றி பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.

சென்னை அசோக்நகர் பிரம்ம குமாரிகள் இயக்க கிளை சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று முன்தினம் ஆலந்தூரில் தொடங்கி, நங்க நல்லூர், ஆதம்பாக்கம், திரிசூலம் வரை நடைபெற்றது. இந்நிலையில், திரிசூலத்தில் நேற்று நடமாடும் வாகனம் மூலம் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியை திரிசூலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாகனம் பல்லாவரம், நாகல்கேணி, திருமுடி வாக்கம், திருநீர்மலை வழியாக எருமையூர் வரை சென்றது.

இது தொடர்பாக பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பி.கே.சுந்தரேசன் கூறும்போது, “பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பாக கடந்த 10 ஆண்டுகளாக புகையிலை ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் மே 29, 30, 31 ஆகிய தேதிகளில் ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வில்லிவாக்கம், கும்மிடிப் பூண்டி, மீஞ்சூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களிலும் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. இதுதவிர, நடமாடும் வாகனத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புகையிலை பழக்கத்திலிருந்து தியான பயிற்சி மூலம் விடுபட முடியும். எனவே புகைப் பழக்கத்தின் தீமைகள் குறித்தும், அதிலிருந்து தியானப் பயிற்சி மூலம் விடுபடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்பிரச்சார பயணத்தை நடத்துகிறோம்’’ என்றார்.

இந்த பிரச்சாரத்தின் போது, பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் அசோக்நகர் கிளை மேலாளர் பிரம்மாகுமாரி தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x