Published : 17 Jun 2015 07:50 AM
Last Updated : 17 Jun 2015 07:50 AM

ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் உள்ளிட்ட 2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் உள்ளிட்ட இருவரின் முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

எம்.ஏ. நிஜார் அகமது என்பவர் தனது மகளுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் வாங்குவதற்காக செல்வகுமார் என்பவர் மூலம் போக்குவரத்துத் துறை துணை செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜை சந்தித்தார். கல்லூரியில் இடம் வாங்குவதற்கு அவர்கள் கேட்டுக் கொண்டபடி ரூ.50 லட்சத்தை சில தவணைகளாக நிஜார் அகமது கொடுத்துள்ளார். அதன்படி, மருத்துவப் படிப்புக்கான இடமும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. பலமுறை முறையிட்டும் பணம் கிடைக்காததால் சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்தில் நிஜார் அகமது புகார் கொடுத்தார். அதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ், செல்வகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்களை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 13-ம் தேதி தள்ளுபடி செய்தது.

அதைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி அவர்கள் மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன்ராஜ் உள்ளிட்ட இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது அவர் கூறுகையில், “இவ்வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி குற்றம்சாட்டப்பட்ட இருவரும் ரூ.25 லட்சத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவில்லை. புலன் விசாரணையும் ஆரம்பகட்டத்தில் உள்ளது. எனவே, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து இருவரது முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி சுப்பையா உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x