Published : 01 Jun 2015 03:39 PM
Last Updated : 01 Jun 2015 03:39 PM

ஐஐடி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: மறியல் செய்ய முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் கைது

மாணவர் அமைப்புக்கு தடை விதித்த ஐஐடி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக மாணவர் அணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஐஐடி-யில் இயங்கி வந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐஐடி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக மாணவர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐஐடி அருகேயுள்ள மத்திய கைலாஷ் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாணவர் அணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தலைமை வகித்தார். கோவி.செழியன் எம்எல்ஏ உட்பட 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர். மாணவர் அமைப்பு மீது விதிக்கப் பட்ட தடையை நீக்கக்கோரி அவர்கள் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய இள.புகழேந்தி, “அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கும் விதமாக மாணவர் அமைப்புக்கு ஐஐடி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்வோம். அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் முடிவெடுப்போம்” என்றார்.

முன்னதாக, ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தியிடம் இள.புகழேந்தி அளித்த மனுவில், ‘மாணவர் அமைப்புக்கு தடை விதித்திருப்பது சட்டப்படி தவறு. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. மாணவர் நலனை கருத்தில்கொண்டு தடையை திரும்பப் பெற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

திமுக மாணவர் அணியினரைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது, ‘‘எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் அமைப்பை தடை செய்திருப்பது ஐஐடி நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கை காட்டுகிறது. ஒரு மொட்டை கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுத்திருப் பது மிகவும் மோசமான செயல். அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்துகள் மாணவர்களைச் சென்றடைவதை தடுக்க முயற்சிக்கின்றனர். இட ஒதுக்கீட்டு விதிமுறைகளை ஐஐடியில் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்றார்.

அதன்பிறகு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை மாவட்ட முதன்மைச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், இந்திரபாபு, மோகன் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் மத்திய கைலாஷ் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர் ஆர்ப்பாட்டங்களால் மத்திய கைலாஷ் பகுதி நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

போலீஸார் சிறப்பு ஏற்பாடு

சென்னை ஐஐடி அமைந்துள்ள கிண்டி சர்தார் படேல் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். காலை நேரத்தில் அரசு பஸ்கள், தனியார் கல்லூரி பஸ்கள், ஊழியர் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என வாகனங்கள் அந்த வழியில் அதிகமாக செல்லும். இதைக் கருத்தில்கொண்டு, மாணவர் அமைப்பு தடை விவகாரம் தொடர்பாக ஐஐடி முன்பு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்த போலீசார் தடை விதித்துவிட்டனர். அத்துடன் ஐஐடியின் நுழைவு வாயில் முன்பாகவும், வெளியே வரும் வாயிலிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

ஐஐடி-யிலிருந்து சற்று தொலைவில் உள்ள மத்திய கைலாஷ் அருகே அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர். இதனால், சர்தார் படேல் சாலையில் போக்குவரத்துக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் வாகனங்கள் சீராக சென்றன. அதேபோல், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவந்த மத்திய கைலாஷ் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. அரசியல் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களை பார்த்தபடியே தரமணி ராஜீவ் காந்தி சாலையிலும் சர்தார் படேல் சாலையிலும் வாகனங்கள் பயணித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x