Published : 22 Jun 2015 08:57 PM
Last Updated : 22 Jun 2015 08:57 PM

முதல்வர் பிரச்சாரத்துக்காக பள்ளிகளை மூடுவதா?- ஸ்டாலின் கேள்வி

ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்பதற்காக பள்ளிகளை மூடுவதா என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில் இட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

வருகின்ற 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவரது அமைச்சரவை சகாக்கள் தொகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து தேர்தல் விதிமுறைகளை வியூகம் அமைத்து மீறி வருகிறார்கள்.

சேலத்திலிருந்து ஒரு உதவிப் போலீஸ் கமிஷனரே விடுப்பு வாங்கிக் கொண்டு “கரை வேஷ்டியுடனும்” “அம்மா படத்துடனும்” தொகுதிக்குள் பிரச்சாரம் செய்ததைப் பார்த்தோம். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இன்றைய தினம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை முன்னிட்டு ஆர்.கே.நகரில் உள்ள பள்ளிகளையும் விதிமுறை மீறல் செய்ய தூண்டியிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்.

அங்குள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு மிரட்டல் விடுத்து, படிக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்கு பள்ளிகளின் சார்பிலே எஸ்.எம்.எஸ். அனுப்ப வைத்து, “அதிகாரபூர்வமற்ற விடுமுறையை” இன்றைய தினம் ஆர்.கே. நகர் தொகுதியில் அறிவித்துள்ளார்கள். இதனால் அலுவலகம் சென்ற பெற்றோர்கள் பலரும் அலறி அடித்துக் கொண்டு “பெர்மிஷன்” போட்டு வந்து வந்து பிள்ளைகளை அவசர அவசரமாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என்று தேர்தல் விதிமுறைகளை மீறிய ஆளுங்கட்சியினருக்கு உதவிகரமாக இருந்த தேர்தல் அதிகாரிகள் இப்போது முதல்வருக்காக நடைபெற்ற தேர்தல் விதிமுறையை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வேதனையளிக்கிறது. ஜனநாயக மாண்புகள், தேர்தல் நெறிமுறைகள் எல்லாம் சீர்குலைக்கப்பட்டும் தேர்தல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குறியது.

நேர்மையான தேர்தலை நடத்த ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரிகள் துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்பது உள்ளபடியே ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் கவலைகொள்ள வைத்திருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x