Published : 21 Jun 2015 09:10 AM
Last Updated : 21 Jun 2015 09:10 AM

ராமஜெயம் கொலை வழக்கு: முக்கிய தகவல்கள் கிடைத்தும் கொலைக்கான காரணம் தெரியவில்லை - நீதிமன்ற கெடு முடிய 34 நாட்கள்; தவிப்பில் சிபிசிஐடி போலீஸார்

தமிழக முன்னாள் அமைச்சர் திருச்சியைச் சேர்ந்த கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறும் சிபிசிஐடி போலீஸார், கொலைக்கான காரணத்தை(மோட்டிவ்) கண்டுபிடிக்க முடியாமல் தவித்துவருகின்றனர்.

திமுகவைச் சேர்ந்த கே.என்.நேருவின் வலதுகரமாக செயல்பட்ட அவரது தம்பி ராமஜெயத்தை அடையாளம் தெரியாத கும்பல் 29.3.2012-ல் கொடூரமான முறையில் கொலை செய்து திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச் சோலை அருகே காவிரி ஆற்றின் கரையில் வீசிச் சென்றது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கை முதலில் ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரித்தனர். தொடர்ந்து மாநகரக் காவல் துறை சார்பில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதைத்தொடர்ந்து 3 மாதங்கள் கழித்து சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி மலைச்சாமி தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 1,000-த்துக்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர்.

ராமஜெயம் வீடு மற்றும் அவரது சடலம் கிடந்த பகுதிகளில் உள்ள செல்போன் டவர்களில் பதிவான எண்களை வைத்து போலீஸார் விசாரித்தனர். பழைய கொலைக் குற்றவாளிகள், ரவுடிகள் என நூற்றுக்கணக்கானோர் மற்றும் ராமஜெயத்தின் செல்போன் எண்ணுக்கு பேசியவர்களும் விசாரிக்கப்பட்டனர். ஆயினும் எந்த முன்னேற்றமும் இல்லை.

3 ஆண்டுகளை கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ராமஜெயத்தின் மனைவி லதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 24-ம் தேதிக்குள் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென ஜூன் 12-ம் தேதி சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையில் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் வேகம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி வட்டாரத்தில் விசாரித்தபோது, ராம ஜெயம் கொலை வழக்கில் முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். விசாரணையின் அனைத்து விவரங்களையும் வெளியிட்டால் அது விசாரணையை பாதிக்கும். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பிறகு எடுத்துக் கொண்ட அதே வேகத்துடன் தொடர்ந்து தற்போதும் தொய்வின்றி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், கொலைக்கான காரணம் சரிவர தெரியவில்லை என்பதால் குற்ற வாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது என தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 12-ல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கு தொடர்பாக முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி எஸ்.பி. அன்பு தெரிவித்துள்ள நிலையில், கொலைக்கான காரணம் இன்னும் புலப்படவில்லை என்று கூறுவதால், நீதிமன்றம் அளித்துள்ள கால அவகாசத்துக்குள் உண்மைக் குற்றவாளிகளை சிபிசிஐடி கண்டுபிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x