Published : 17 Jun 2015 08:33 PM
Last Updated : 17 Jun 2015 08:33 PM

தேர்தல் துறை நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம்: திமுக வெளிநடப்பு

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக தேர்தல் துறை நடத்தியது. இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரதிநிதி கிரிராஜன் வெளிநடப்பு செய்தார்.

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்துதல் மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது.

இதில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சேதுராமன் (அதிமுக), கிரிராஜன் (திமுக), எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி (தேமுதிக), லெனின், ராஜகோபால் (இந்திய கம்யூனிஸ்ட்), பாக்கியம், ரமணி (மார்க்சிஸ்ட்), யுவன்செல்வராஜ் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சியினர் பங்கேற்கவில்லை.

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி குறித்தும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை சுமுகமாக நடத்துவது, புகார் அளிப்பது தொடர்பான புதிய திட்டம் குறி்த்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முன்னதாக கூட்டம் தொடங்கியதும் திமுக பிரதிநிதி கிரிராஜன், ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக பேசுவதாக இருந்தால் அங்குள்ள சுயேச்சைகளையும் அழைத்திருக்கலாம்’’ என்றார். அதற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ‘‘இது தேர்தல் தொடர்பான பொதுவான கூட்டம்தான்’’ என்றார்.அதன்பிறகு சிறிது நேரத்தில் கிரிராஜன் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.

காரணம் என்ன?

வாக்காளர் பட்டியலை நூறு சதவிகிதம் சரி செய்தல் என்ற தலைப்பில் விவாதிக்க அழைப்பு அனுப்பிவிட்டு, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்துகிறது என்கின்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிட முயல்கிறது என்று இக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தேன் என்று திமுக பிரதிநிதி கிரிராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கூட்டம் தொடங்கியதும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகள் குறித்த குறும்படம் காட்டப்பட்டது. மேலும், இடைத் தேர்தல் தொடர்பாக வந்திருக்கும் அனைத்து புகார்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், புதியதாக போடப்படும் சாலைகள், மின் கேபிள்கள் மாற்றம், தெருவிளக்குகள் மாற்றம் ஆக அனைத்து பணிகளும் விதிகளுக்கு உட்பட்டே நடைபெற்று வருகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நியாப்படுத்தி விளக்கி பேசினார்.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். அப்போது, நான், "தங்களால் அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து விவாதிப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அத்துடன், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் அத்துமீறல்கள், தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் குறித்து விவாதிக்க வேண்டுமெனில், அத்தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள், முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து இதுகுறித்து விவாதித்தால், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் அத்துமீறல்ககளின் உண்மை தன்மையை அறிய முடியும்.

அதைவிடுத்து, வாக்காளர் பட்டியலை நூறு சதவிகிதம் சரி செய்தல் என்ற தலைப்பில் விவாதிக்க அழைப்பு அனுப்பிவிட்டு, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்துகிறது என்கின்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிட முயல்கிறது என்று இக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் வெளிநடப்பு செய்தேன்'' என்று கிரிராஜன் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x