Published : 14 Jun 2015 10:17 AM
Last Updated : 14 Jun 2015 10:17 AM

15 ஆண்டுகளாக ஆர்.கே.நகர் தொகுதியை அதிமுக கண்டுகொள்ளாதது ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

கடந்த 15 ஆண்டுகளாக அதிமுக வசம் இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை எந்த வளர்ச்சிப் பணிகளையும் மேற் கொள்ளாதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வேன் பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் பாஜக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தென் சென்னைக்கான தூய்மை இந்தியா பிரச்சார வேனை கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடங்கிவைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பல துறைகளில் வேகமாக முன்னேறி வரும் இந்தியாவுக்கு தூய்மையின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகம் வியக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள நமது பெருநகரங்கள், குப்பை மேடாக காட்சி தருகின்றன. சொந்த வீட்டைப்போல பொது இடங்கள், அலுவலகங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் எண்ணம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் இந்த சவாலை எதிர்கொள்ள முடியும்.

அதற்காகவே, மகாத்மா காந்தி பிறந்த நாளில் ‘தூய்மை இந்தியா’ என்ற பிரச்சார இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரம் செய்து வருகிறோம்.

கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வசம் இருந்தும் அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சென்னை மாநகரிலேயே மிகவும் பின்தங்கிய தொகுதியாக உள்ளது. ஆனால், இப்போது முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்றதும் ஆர்.கே.நகரில் திடீர் திடீரென சாலைகள் போடுகின்றனர். தெருக்களை சுத்தம் செய்கின்றனர். புதிது புதிதாக வாக்குறுதிகள் அளிக்கின்றனர். ஆனால், இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது.

கும்பகோணத்தில் வரும் 16, 17 தேதிகளில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் நடை பெறவுள்ளது. 2016 சட்டப்பேரவைத் தேர்தல், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து அதில் விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x