Last Updated : 19 Jun, 2015 08:05 AM

 

Published : 19 Jun 2015 08:05 AM
Last Updated : 19 Jun 2015 08:05 AM

அரசு சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி மாணவர் சேர்க்கைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி படிப்பில் மாணவர்களை சேர்க்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த அசோக், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சட்டக் கல்லூரியில் சேர வயது நிர்ணயம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் விதியில் 2008-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த விதியை அம்பேத்கர் பல்கலைக்கழகம் பின்பற்ற தமிழக சட்டத் துறை செயலர் உத்தரவிட்டார். இருப்பினும் வயது வரம்பை கடந்தவர்களும், கல்லூரிக்குச் சென்று படிக்காதவர்களும் சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சட்டப்படிப்பில் சேர்வதற்கான வயது வரம்பை நீக்க ஒரு நபர் பரிந்துரை செய்ததை பார் கவுன்சில் ஏற்றுக்கொண்டது. சட்டப்படிப்பில் சேர்வதற்கான வயது வரம்பை நீக்கி பார் கவுன்சில் 28.9.2013-ல் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தற்போது சட்டக்கல்லூரிகளில் வயது வரம்பு இல்லாமல் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், 3 ஆண்டு எல்எல்பி சட்டப்படிப்பில் சேர அனைத்து சமூகத்தினருக்கும் வயது வரம்பு தளர்த்தியும், 5 ஆண்டு படிப்புக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வயது வரம்பு இல்லாமலும், மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு 21 என்றும் 4.6.2015-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், சட்டப்படிப்பில் வயது வரம்பு நிர்ணயம் செய்துதான் மாணவர்களை சேர்க்க வேண்டும், அதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது.

பார் கவுன்சில் அமைத்த குழுவுக்கு சட்டப் படிப்புக்கான வயது மற்றும் தேவைகளை நிர்ணயம் செய்வதற்குப் போதிய அனுபவம் இல்லை. சட்டப்படிப்பை பொருத்தவரை இந்திய பார் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு இணைந்து செயல்பட வேண்டும். எனவே, வயது வரம்பை நீக்கி பார் கவுன்சில் செயலர் பிறப்பித்த உத்தரவையும், மாணவர் சேர்க்கை தொடர்பாக அம்பேத்கர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும். அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின், வயது வரம்பை நீக்கி பார் கவுன்சில் 28.9.2013-ல் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும், சென்னை அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி. படிப்பிலும், சென்னை சிறப்பு சட்டப் பள்ளியில் 3 ஆண்டு எல்எல்பி (ஹானர்ஸ்) படிப்பிலும் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மத்திய, மாநில சட்டத்துறை செயலர்கள், அகில இந்திய பார் கவுன்சில் செயலர், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், பல்கலைக்கழக மானியக்குழு, அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x