Published : 11 May 2014 10:55 AM
Last Updated : 11 May 2014 10:55 AM
முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, குழந்தை இல்லாததை காரணம் காட்டி கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது மனிதத் தன்மையற்ற செயல் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மராஜ் பிள்ளைக்கும், சுவர்ணத்தம்மாளுக்கும் திருமணமாகி 26 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகவே, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தர்மராஜ் முடிவெடுத்தார். இதற்கு சுவர்ணத்தம்மாளின் ஒப்புதலைப் பெறுவதற்காக வீடு இருந்த இடத்தை, கடந்த 1965-ம் ஆண்டு அவருக்கு தர்மராஜ் வழங்கினார். அதன்பிறகு வேறொரு பெண்ணை அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
தர்மராஜ் இறந்துவிட்டதால், அவர் தனக்கு வழங்கிய வீட்டு சொத்தை கலியபெருமாள் என்பவருக்கு சுவர்ணத்தம்மாள் விற்பனை செய்தார். இதை எதிர்த்து விருத்தாசலம் உரிமையியல் நீதிமன்றத்தில் இரண்டாவது மனைவி வழக்கு தொடர்ந்தார்.
தர்மராஜ் வழங்கிய வீட்டு சொத்தை சுவர்ணத்தம்மாள் அனுபவித்து வரலாமே தவிர, அதை விற்பதற்கு அவருக்கு உரிமை இல்லை. ஏனென்றால், சொத்தை வழங்கியபோது செய்த பத்திரப் பதிவில், சுவர்ணத்தம்மாள் உயிரோடு இருக்கும்வரை அந்த சொத்தை அனுபவித்துக் கொள்ளலாம். அவருக்கு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு சொத்து செல்லும். இல்லையெனில் சுவர்ணத்தம்மாள் இறந்தபிறகு மீண்டும் தனக்கே சொத்து திரும்ப வந்து சேரும் என்றுதான் தர்மராஜ் கூறியுள்ளார். எனவே, சுவர்ணத்தம்மாள் சொத்தை விற்றது செல்லாது என்று மனுவில் இரண்டாவது மனைவி கூறியிருந்தார்.
அவர் தரப்பின் இந்த வாதத்தை ஏற்று விருத்தாசலம் நீதிமன்றம் 1986-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நிலத்தை வாங்கிய கலியபெருமாள், கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கலியபெருமாளுக்கு நிலத்தை சுவர்ணத்தம்மாள் விற்றது செல்லும் என 1987-ம் ஆண்டு கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மனைவி மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.விமலா, “தனது கணவர் வழங்கிய சொத்தில் முதல் மனைவியான சுவர்ணத்தம்மாளுக்கு முழு உரிமையும் உள்ளது. அவர் அந்த நிலத்தை விற்பனை செய்தது செல்லும்” என்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:
திருமணமான ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள் உள்ளன. கணவனின் உடல் தகுதிகூட காரணமாக இருக்கலாம். ஆனால் குழந்தையின்மைக்கு மனைவி மட்டுமே காரணம் என்ற மிகவும் தவறான எண்ணம் இங்கு நிலவுகிறது.
முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, குழந்தையின்மையை காரணம் காட்டி கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது என்பது மனிதத் தன்மையற்ற செயல். இந்த வழக்கில் 26 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த மனைவி இருக்கும்போது, குழந்தை இல்லாததை காரணம் காட்டி கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மனைவி என்ற தனது ஸ்தானத்தை இன்னொரு பெண்ணுடன் பங்கிட்டுக் கொள்ளும்படி முதல் மனைவி கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார். அந்த நேரத்தில் கணவர் தனது முதல் மனைவிக்கு ஜீவனாம்சமாக சொத்தை வழங்கியுள்ளார்.
அவ்வாறு ஜீவனாம்சமாக வழங்கப்பட்ட சொத்தில் முதல் மனைவிக்கு முழு உரிமையும் உள்ளது. அதை அவர் விற்பனை செய்தது செல்லும். மாறாக அத்தகைய உரிமை எதுவும் முதல் மனைவிக்கு இல்லை என்றும் கூறும் நிலை ஏற்பட்டால், இந்த ஒட்டுமொத்த சமுதாயமும் மின்னணு காலத்திலிருந்து மீண்டும் கற்காலத்துக்கே செல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு நீதிபதி விமலா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT