Published : 16 Jun 2015 09:47 AM
Last Updated : 16 Jun 2015 09:47 AM

தரவரிசைப் பட்டியல் ஜூன் 19-ல் வெளியிடப்படுகிறது: பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் ஒதுக்கீடு - பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி ஆரம்பம்

பொறியியல் படிப்புக்கு விண்ணப் பித்த ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 134 மாணவ-மாணவிகளுக்கு நேற்று ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் இம்மாதம் 19-ம் தேதி வெளியிடப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் இடங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் ஆகியவை ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொது கலந் தாய்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான பொது கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) பொறியியல் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் சேர ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 134 மாணவ-மாணவிகள் விண்ணப் பித்தனர். கலந்தாய்வின்போது ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் எடுக் கும்போது யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதை முடிவு செய்ய கடைசி வாய்ப்பாக ரேண்டம் எண் பார்க்கப்படும்.

ரேண்டம் எண் என்பது விண்ணப்பதாரர்களுக்கு கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் 10 இலக்க எண் ஆகும். கணிதம், இயற்பியல், 4-வது விருப்பப் பாடம், பிறந்த தேதி ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கும்பட்சத்தில் ஐந்தாவதாக யாருடைய ரேண்டம் எண்ணின் மதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த மாணவர் முதலில் கலந்தாய்வுக்கு அழைக் கப்படுவார்.

அந்த வகையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர் களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை கிண்டி யில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.ராஜாராம், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரிய ராஜ் ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா கணினி மூலம் மாணவ-மாணவிகளுக்கு ரேண்டம் எண்களை ஒதுக்கீடு செய்தார். மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) குறிப்பிட்டு தங்களுக்குரிய ரேண்டம் எண்ணை அறிந்துகொள்ளலாம்.

மொத்தமுள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் பொது கலந் தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இவை தவிர, இந்த ஆண்டு பல தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக் கீட்டின் கீழ் நிரப்பப்பட வேண்டிய 21 ஆயிரத்து 741 இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்திடம் சரண்டர் செய்துள்ளன. எனவே, பொது கலந்தாய்வு மூலமாக 2 லட்சத்து 6 ஆயிரத்து 508 இடங்கள் நிரப்பப்படும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, தரவரிசைப் பட்டியல் வருகிற 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும். விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 28-ம் தேதி அன்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு 29-ம் தேதி அன்றும் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து பொதுவான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி நிறைவடையும்.

80,446 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 134 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 92 ஆயிரத்து 316 பேர் மாணவர்கள். 58 ஆயிரத்து 818 பேர் மாணவிகள். விண்ணப்பித்த ஒட்டுமொத்த மாணவ-மாணவிகளில் 80 ஆயிரத்து 446 பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள். அதாவது, குடும்பத்தில் இருந்து இவர்கள்தான் முதல்முறையாக கல்லூரி படிப்புக்கு அடியெடுத்து வைத்திருப்பவர்கள். முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கான டியூஷன் கட்டணத்தை (ரூ.20 ஆயிரம்) அரசே செலுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x