Published : 03 Jun 2015 10:24 AM
Last Updated : 03 Jun 2015 10:24 AM

அறிவியல்ரீதியில் மரங்கள் கவனிக்க மேலாண்மை துறை ஏற்படுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை

சென்னை மாநகரத்தில் உள்ள மரங்களைப் பாதுகாக்க அறிவியல் ரீதியிலான மரங்கள் கவனிப்பு மேலாண்மைத் துறையை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னை மாநகரப் பகுதியில் 387.35 கிலோ மீட்டர் பேருந்து சாலைகளும், 5,623 கிலோ மீட்டர் உட்பிரிவு சாலைகளும் உள்ளன. இந்த சாலை ஓரங்களில் சுமார் 4 லட்சம் மரங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது செப்டம்பர் 16-ம் தேதி 18 மரங்கள், அக்டோபர் 18-ம் தேதி 33 மரங்கள், 23-ம் தேதி 16 மரங்கள், நவம்பர் 12-ம் தேதி 4 மரங்கள் என மொத்தம் 71 மரங்கள் விழுந்துள்ளன. இத் தகவல் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பலத்த சூறாவளி காற்று இல்லாத மழைக்கு விழுந் திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்த மரங்களை நிமிர்த்து வதற்கும், வேறு இடங்களில் நடுவ தற்கும் பல்வேறு தொழில்நுட்பங் கள் மற்றும் கருவிகள் தற்போது கிடைக்கின்றன. இந்நிலையில் சாய்ந்த மரங்களை போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத்து வதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகம் மரங்களை வெட்டி விடுகிறது. போக்குவரத்து அதிகம் இல்லாத, மாற்று வழி உள்ள உட்பிரிவு சாலைகளிலும் சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டாலும், இருக்கும் மரங்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதும் மாநகராட்சியிடம் இல்லை.

பெங்களூரில் மாநகராட்சியில் மாநகர பசுமையின் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு கடந்த 2007-ல் வனத்துறை தோற்றுவிக் கப்பட்டது. இத்துறை மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மரங்களை அகற்றுவது, மழை காலங்களில் சாயும் சாலையோர மரங்களை சாத்தியக் கூறுகள் இருப்பின் நிமிர்த்தி பராமரிப்பது, வளர்ச்சிப் பணிகளுக் காக அகற்றப்படும் மரங்களை வேறு இடத்தில் நட்டு வளர்ப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற ஒரு துறை சென்னை மாநகராட்சியில் இல்லை.

இது தொடர்பாக ‘நிழல்’ என்ற மரங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் ஷோபா மேனனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

‘‘மரங்கள் போதிய கவனிப்பின்றி

அடிப்பகுதி பட்டுப் போவது, மரங்களுக்கு கிடைக்கும் நீராதாராம் தடுக்கப்படுவது, புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப கிளைகளின் வளர்ச்சி உறுதி செய்யாதது போன்ற காரணங்களால் மழை காலங்களில் மரங்கள் விழுகின்றன. அதனால் மரங்களை பாதுகாக்க அறிவியல் ரீதியிலான மரங்கள் கவனிப்பு மேலாண்மைத் துறை மாநகராட்சிக்கு அவசியம்.

மரங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உள்ளது. எங்கேனும் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அறிந்தால், அதற்கென ஒரு துறை இருந்தால் தான் அவர்களால் புகார் தெரிவிக்க முடியும்.’’ இவ்வாறு அவர் கூறி னார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நல்ல யோசனை. சென்னை மாநகரப் பகுதியில் 33 சதவீத பசுமை பகுதியை உறுதி செய்ய மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x