Published : 03 Jun 2015 09:08 AM
Last Updated : 03 Jun 2015 09:08 AM

ஐஐடி முன்பு போராட்டம் நடத்திய 100 பேர் கைது: விரைவில் மாணவர் வாரிய கூட்டம் நடத்த நிர்வாகம் ஒப்புதல்

அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டத்தை சென்னை ஐஐடி நிர்வாகம் தடை செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர மாணவர் இயக்கத்தினர் 100 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதையடுத்து கடந்த 3 நாட்களாக ஐஐடி முன்பு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஐஐடி வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புரட்சிகர மாணவர் அமைப்பைச் சேர்ந்த சுமார் 150 பேர் நேற்று காலையில் ஐஐடி வளாகத்தின் முன் போராட்டம் நடத்தினர். அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லாததால், போலீஸார் மாணவர்களை மறித்தனர். அதையும் மீறி மாணவர்கள் வளாகத்தின் உள்ளே செல்ல முயன்றதால், போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இது குறித்து புரட்சிகர மாணவர் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மருது கூறும்போது, “எங்களில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸார் எங்களை மிரட்டியபடியே தாக்குதல் நடத்தினர்” என்றார்.

பேச்சுவார்த்தை

அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டத்தைச் சேர்ந்த 50 பேர் நேற்று ஐஐடி வளாகத்தின் உள்ளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாசிப்பு வட்டத்தின் மீதான தடையை நீக்க வேண்டும், ஐஐடி மாணவர் பிரிவு டீன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், ஐஐடி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர் அமைப்புகளையும் அங்கீகரித்து சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன் பிறகு, ஐஐடி இயக்குநர் (பொறுப்பு) மாணவர்களை சந்தித்து பேசினர். இது குறித்து அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் கூறும்போது, “இந்த பிரச்சினை தொடர்பாக மாணவர் வாரிய கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும் அந்தக் கூட்டத்தில் எங்களது கோரிக்கைகளை விளக்கிச் சொல்லுமாறும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது” என்றார்.

இந்த வார கடைசியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் மாணவர் வாரிய கூட்டம் நடைபெறும் என ஐஐடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யவில்லை : ஐஐடி இயக்குநர்

அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்யவில்லை என்று ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயத்துக்கு மின்னஞ்சலில் அவர் அளித்துள்ள பதில்:

அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டம் ஒரு கூட்டம் நடத்தியதாகவும் அதில் மாணவர் அமைப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. எனவே, அந்த வாசிப்பு வட்டத்திடம் விளக்கம் கேட்டிருந்தோம். அதை அவர்கள் தடை என்று தவறாக புரிந்து கொண்டார்கள். இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். நாங்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஐஐடி மாணவர் பிரிவுத் தலைவர் எம்.சிவகுமார் கூறுகையில், அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “உங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை நீங்கள் தவறாகப் பயன்படுத்தியதன் காரணமாக உங்களது அமைப்புக்கான அங்கீகாரம் ரத்தாகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் நிலைப்பாட்டை எந்த நேரத்திலும் நீங்கள் விளக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x