Published : 10 Jun 2015 08:30 AM
Last Updated : 10 Jun 2015 08:30 AM

ஜெ. வழக்கில் பாஜக, காங்கிரஸுக்கு எந்தத் தொடர்பும் இல்லை: காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிறப்புப் பேட்டி

“சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டதில் பாரதிய ஜனதா கட்சிக்கோ, மேல்முறையீடு செய்வ தில் காங்கிரஸுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப் பினர் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

தமிழகத்தில் தேர்தலை எதிர்நோக்கி புதிய கூட்டணிகள் உருவாகும் போல் தெரிகிறதே?

எல்லாமே ஊகங்கள்தான். கூட்டணிகள் எந்தளவுக்கு கைகூடி வரும் என்று இப்போது கணிக்க முடியாது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்ற ஒரே ஆயுதத்தைத் தவிர இப்போது நம் கையில் எதுவுமில்லை.

கூட்டணி எப்படி அமைய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு பல காரணங்கள். இந்த நிலையில் அடுத்து அமையும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பலமாக இருக்க வேண்டும். காங்கிரஸுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண் டும். அப்படியொரு கூட்டணியைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சி வரவேண்டும் என சொல்லப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அந்த மாற்றம் அவசியம் வரவேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மையானவர்களின் விருப்பமும் இதுதான். 1967-க்குப் பிறகு தமிழகத்தை இந்த 2 கட்சிகள்தான் மாறி மாறி ஆள்கின்றன. இதனால் மக்கள் அலுத்துக் கிடக்கிறார்கள். இவர் களைத் தாண்டி ஒரு பிரதான கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளரவேண்டும். ஆனால், அதற்கான வடிவம் இருக்கிறதா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

மோடியின் ஓராண்டு ஆட்சிக்கும் ஜெயலலிதாவின் 4 ஆண்டு ஆட்சிக்கும் உங்களது மதிப்பீடு?

மோடி என்னென்ன வாக்குறுதி களை கொடுத்து ஆட்சிக்கு வந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால், பாஜக ஆட்சியில் நாங்கள் இன்னின்ன பலன்களை எல்லாம் அனுபவிக்கிறோம் என்று யாராவது சொல்லமுடியுமா? மோடி ஆட்சி மக்களுக்கு ஆக்கப்பூர்வமான எந்த நன்மையையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. மக்களும் இதை நன்கு உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதா என்கிற ஒரு தனி நபரை நம்பியே அரசு இருக்கிறது. இங்கே அமைச்சரவையும் சட்டமன்றமும் செயல்படவில்லை. தனிநபர் அரசாங்கம் நடப்பதால் மக்களுக்கு இலவசங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால், மாநிலத்தின் கட்டுமானம் ஸ்தம்பித்து நிற்கிறது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தாக்கம் தேர்தலில் அதிமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சொல்கிறார்களே?

திருமங்கலம், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஃபார்முலாக் களால் தமிழகத்தில் ஜன நாயகம் கொச்சைப்படுத்தப் பட்டுக்கிடக்கிறது. கொள்கையை மறந்து ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் வேரூன்றி விட்டதால் ஊழல் வழக்குகள், தனி நபர் மீதான குற்றச்சாட்டுகள் இதெல்லாம் இனி வரும் தேர்தல்களில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதற்கு மக்களும் ஒரு முக்கியக் காரணம் என்பது எனது கருத்து.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க திருமாவளவன் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறாரே?

கூட்டணி ஆட்சி எப்படி வரும்? பிரதான கட்சிகளுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால், தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால்தான் கூட்டணி ஆட்சி சாத்தியம். ஆனால், அதற்கு பிரதான கட்சிகள் தயாராக இருக்கிறார்களா என்று தெரியவில்லையே.

எதிர்க் கட்சிகள் சிதறிக் கிடப்பதால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் என்கிறாரே தமிழருவி மணியன்?

இதுவரை தமிழருவி மணிய னின் பல தியரிகள் பொய்த்துப் போயிருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் இருக்கையில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே, இப்போதுள்ள நிலையை வைத்து இந்தக் கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று சொல்வதை ஏற்கமுடியாது.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவிக்க பாஜக-வும், வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு காங்கிரஸ் தலைமையும் அக்கறை எடுத்துக் கொண்டன என்று சொல்லப்படுவது பற்றி..?

18 வருடங்களாக நடந்த இந்த வழக்கு எத்தனையோ அரசுகளை சந்தித்து விட்டது. எனவே, ஜெயலலிதாவை விடுவித்ததில் பாஜக-வுக்கோ, மேல்முறையீடு செய்வதில் காங்கிரஸுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதான் எனது திட்டவட்டமான கருத்து.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்திருப்பது சரிதானா?

தமிழகத்தில் இடைத் தேர்தல்கள் எப்படி நடக்கின்றன என்று அனைவருக்கும் தெரியும். யாரை ஏமாற்ற இந்தத் தேர்தல்? இடைத்தேர்தலுக்கான மரியாதையையே குலைத்து விட்டார்கள். இடைத் தேர்தலே தேவை இல்லை என்பதுதான் எனது கருத்து. அதற்கு பதிலாக, ஏற்கெனவே அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியின் பிரதிநிதி ஒருவரையே எம்.எல்.ஏ-வாக கவர்னர் நியமனம் செய்துவிடலாம். மக்களது வரிப்பணமாவது வீணாகாமல் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x