Last Updated : 23 Jun, 2015 05:33 PM

 

Published : 23 Jun 2015 05:33 PM
Last Updated : 23 Jun 2015 05:33 PM

அரசு அதிகாரிகளை பார்த்திராத கிராம மக்கள்: மருத்துவமனைக்கு மினி லாரியில் செல்லும் அவலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் சாரகப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஓசட்டி. இக்கிராமத்தில் 55 வீடுகள் உள்ளன. விவசாயம், கூலி தொழிலை அடிப்படையாக கொண்டு 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த முனிரெட்டி என்பவர் கடந்த 1957-62-ல் ஓசூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1962 - 67-ல் உ த்தனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ஓசட்டி கிராமத்திற்கு சாலை வசதி அமைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பராமரிப்பு இல்லாமலும், அதிகாரிகள் இக்கிராமத்தில் போதிய கவனம் செலுத்தாத காரணத்தால் மதகொண்டப்பள்ளியில் இருந்து ஓசட்டி செல்ல தரமற்ற தார் சாலையும், அதனை தொடர்ந்து மேடு, பள்ளமான மண் சாலையும் உள்ளது. இக்கிராமத்திலிருந்து பள்ளி, வேலைக்கு செல்பவர்கள் இச்சாலையை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தாய் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிக்கு, ஆழ் துளை கிணற்றிலிருந்து இணைப்பு கொடுக்காத காரணத்தால், சின்டெக்ஸ் பாழாகி வருகிறது.

இது குறித்து அக்கிராம மக்கள் கூறும் போது, சாலை வசதி கேட்டு பலமுறை மனு அளித்து உள்ளோம். ஒவ்வொரு தேர்தல், வாக்காளர் கண்கெடுப்பின் போது மட்டும் ஆசிரியர்கள் இக்கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மதகொண்டப்பள்ளிக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திலுல்ள ஓசூர் அல்லது தளிக்கு நடந்து செல்கிறோம். கடந்த 2009-10 ஆண்டு ரூ.75 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. தற்போது கால்வாய் உடைந்து சாக்கடை தெருவில் தேங்கி நிற்கிறது. ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரில் அதிக அளவு மருந்துகள் கலப்பதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

முகாம்கள்

திடீர் அவசர காலங்களில் இச்சாலை வழியாக 108 ஆம்புலன்ஸ் வர இயலாத காரணத்தால், மினி சரக்கு லாரி மூலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கொண்டு தேன்கனிக்கோட்டை, தளி மருத்துவமனைக்கு செல்கிறோம். அரசின் விலையில்லா மின் சாதன பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பசுமைவீடு உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. தற்போது வரை உயர் அதிகாரிகள் யாரும் எங்கள் கிராமத்திற்கு வரவில்லை. ஓசட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் உள்ளிட்ட மக்கள் பயன்பெறும் வகையில் முகாம்கள் நடத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர் இப்பகுதி மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x