Published : 18 Jun 2015 10:06 PM
Last Updated : 18 Jun 2015 10:06 PM

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்திடுக: ராமதாஸ்

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டிற்கான வேளாண் விளைபொருட்களின் குறைந்தட்ச ஆதரவு விலை முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சாதாரண மற்றும் சன்ன நெல் வகைகளின் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.50 மட்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

சாதாரண வகை நெல்லின் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 1360 ரூபாயிலிருந்து ரூ.1410 ஆகவும், சன்ன வகை நெல்லின் கொள்முதல் விலை 1400 ரூபாயிலிருந்து ரூ.1450 ஆகவும் உயர்த்தப் பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இது மிகவும் குறைவாகும். இந்த விலை உயர்வு உழவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. மாறாக, உழவர்களின் கடனும், துயரமும் அதிகரிக்கவே வழி வகுக்கும்.

விவசாயத்திற்கான செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதை ஈடு செய்யும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டால் தான் உழவர்களை தொடர்ந்து வேளாண் தொழிலில் நீடிக்கச் செய்ய முடியும். மத்திய ஆட்சியாளர்கள் இதை உணராதது வருத்தமளிக்கிறது.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,‘‘வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுடன் குறைந்தபட்சம் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிப்பதன் மூலம் வேளாண் தொழிலின் லாபத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில், வாக்குறுதியை நிறைவேற்ற இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, வேளாண் விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயிப்பதில் உழவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை நரேந்திர மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி 3 ஆண்டுகளில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.310, அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ.103.33 உயர்த்தப்பட்டது. ஆனால், உழவர்களுக்கு அதிக கொள்முதல் விலை தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளில் மொத்தம் ரூ.100, அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ.50 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது.

முந்தைய ஆட்சி வழங்கிய கொள்முதல் விலை உயர்வில் பாதியை வழங்குவது தான் சலுகையா? என ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நெல் கொள்முதல் விலையை கடந்த ஆண்டில் 3.89%, நடப்பாண்டில் 3.67% என மிகக் குறைந்த அளவில் உயர்த்துவது விவசாயிகளை அவமதிப்பதற்கு சமமானது என்பதை அரசு உணர வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின்படி, 2013-14ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1424 செலவாகியுள்ளது. இந்த செலவு ஆண்டுக்கு ரூ.100 அதிகரிப்பதாக வைத்துக் கொண்டாலும் நடப்பாண்டில் இது ரூ.1624 ஆக அதிகரித்திருக்கும். ஆனால், மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலை இதைவிடக் குறைவாகும்.

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ.2436 வழங்க வேண்டும். ஆனால், அதில் பாதியளவே கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பெரு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கதாகும்.

வறட்சி, வெள்ளம், நிலம் கையகப்படுத்துதல் என எண்ணற்ற இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு விவசாயம் செய்யும் உழவர்களுக்கு அதிக லாபம் கிடைக்காவிட்டாலும், இழப்பு ஏற்படாமல் உறுதி செய்ய வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை ஆகும். எனவே, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x