Published : 10 Jun 2015 08:05 AM
Last Updated : 10 Jun 2015 08:05 AM

ஜூலை 3-ல் ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டம்

ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு ஜூலை 3-ம் தேதி சென்னையிலுள்ள ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் எம்.சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது:

சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருவாருரில் நடைபெற்றது. கருணைப் பணி நியமனம் செய்வது, ஊராட்சி செயலர்களுக்கு அலுவலக உதவியாளர், இரவுக் காவலர்களுக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊழியர்கள் மன அழுத்தமின்றி பணியாற்றுவது அவசியம். இதற்கு துறையின் அரசு செயலர், இயக்குநரின் அணுகுமுறையில் மாற்றம் உருவாக்கி, அமைதியான சூழலை ஏற்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஜூன் 16 மாலையில் ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்வர்.

அரசுடன் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பேச்சின்போது 12,524 ஊராட்சி செயலர் களுக்கு ஊதிய விகிதம் மாற்றம், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. உடனே அரசாணை வெளியிட கோரி, வரும் ஜூலை 3-ம் தேதி சென்னையில் உள்ள இயக்குநர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x