Published : 05 Jun 2015 08:17 AM
Last Updated : 05 Jun 2015 08:17 AM
சென்னை வியாசர்பாடியில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் மேம்பாலப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பாலத்தின் ஒரு பகுதியை 2 மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நெடுஞ் சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி ரயில்வே சுரங்கப்பாதை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இது மிக குறுகலாக உள்ளதால் இங்கு போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது. துறைமுகத்தில் இருந்து செல்லும் உயரமான கனரக வாகனங்கள், தாழ்வான சுரங்கப் பாலத்தில் அடிக்கடி சிக்குவதால், சாலை போக்குவரத்து மட்டுமின்றி, ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படு கிறது. மழைக் காலத்தில் வாகனங் களை மூழ்கடிக்கும் அளவுக்கு சுரங்கப் பாதையில் வெள்ளநீர் தேங்குகிறது. இந்த பாலத்தால் மக்கள் பெரிதும் அவதிப் படுகின்றனர்.
இதற்கிடையே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை யையும், வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் மேம்பால கட்டுமான பணிகள், கடந்த 2010 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. திட்ட மதிப்பீடு ரூ.80.68 கோடி. பாலத்தின் மொத்த நீளம் 1,720 மீட்டர். இந்த மேம்பால திட்டம் 2012-ம் ஆண்டு இறுதிக்குள் முடிந்திருக்க வேண்டும். திட்ட காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், தற்போதுதான் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் கூறிய தாவது:
வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆரம்பத்தில் டெண்டர் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்த பல மாதங்கள் காத்திருந்ததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அனைத்து சிக்கல்களும் தீர்ந்து பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
வியாசர்பாடி ரயில்வே சுரங்கப் பாதையில் இருந்து கொல்கத்தா நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை நோக்கி செல்லும் பாலத்தின் ஒரு பகுதி முடியும் நிலையில் உள்ளது. சுரங்கப் பாதையில் ரயில்வே சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்துவிட்டால், 2 மாதங்களில் இந்த வழியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட திட்டமிட்டுள்ளோம். பாலத்தின் ஒட்டுமொத்த பணிகளும் அடுத்த 6 மாதங்களில் முடிக்கப்படும்.
கூடவே, பாலத்தை ஒட்டியுள்ள சாலைகளை போதிய அளவில் விரிவாக்கமும் செய்யவுள்ளோம். இப்பாலம் முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘வியாசர்பாடி பகுதியில் இருந்து இந்தக் குறுகிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல முடியவில்லை. இதனால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிக வாகனங்கள் செல்லும்போது மணல், தூசு, புழுதி பறக்கிறது. மக்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு, மேம்பால கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்கவேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT