Published : 02 Jun 2015 07:28 AM
Last Updated : 02 Jun 2015 07:28 AM

கோடை விடுமுறைக்குப் பின் அரசுப் பள்ளிகள் திறப்பு: ஒரே நாளில் 55 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகம்

கோடை விடுமுறைக்குப் பின்னர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நேற்று (திங்கள்கிழமை) திறக்கப்பட்டன. மாநிலம் முழு வதும் நேற்று ஒரே நாளில் 55 லட்சம் மாணவ-மாணவிகளுக்குப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, நீண்ட கால விடுமுறையான கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. (பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஜூன் 4-ந் தேதிதான் திறக்கப்பட உள்ளன.)

நீண்ட விடுமுறைக்குப் பின்னர் தங்கள் வகுப்புத் தோழர்களை சந்தித்த மாணவ-மாணவிகள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். புதிய வகுப்புக்கு மாறியதால் உற்சாகமாக காணப்பட்டனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகம், நோட்டு, சீருடை, காலணி, புத்தகப்பை உள்பட 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், முதல் நாளன்று ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் முதல் பருவத்துக்கான பாடப் புத்தகங் கள், சீருடைகளை ஆசிரியர்கள் வழங்கினர். மாநிலம் முழுவதும் முதல் நாள் அன்று ஏறத்தாழ 55 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

பாடப் புத்தகத்தை தொடர்ந்து நோட்டுப் புத்தகம், சீருடை, புத்தகப்பை என ஒவ்வொரு பொருளாக விநியோகிக்கப் படும் என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x