Published : 30 Jun 2015 07:55 AM
Last Updated : 30 Jun 2015 07:55 AM

பொறியியல் மாணவரின் உடலை வாங்க மறுப்பு: சேலத்தில் உறவினர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிண மாக மீட்கப்பட்ட மாணவரின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல் ராஜ் (23) கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம், பள்ளிப் பாளையம் கிழக்கு தொட்டி பாளையம் ரயில்வே தண்டவாளத் தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

காதல் விவகாரத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டிருப் பதாக அவரது தாய் சித்ரா மற்றும் உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு அடிப்படையில், கடந்த 27-ம் தேதி கோகுல்ராஜின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனைக்கு பின்னர் கோகுல்ராஜின் உடலை அவரது தாய் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து வருவதோடு, இந்த வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடலை பெறமாட்டோம் எனக் கூறி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சேலம் அரசு மருத்துவமனை முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து, 170 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைதானவர்கள் அனைவரும் சேலம் நேரு கலையரங்கில் வைக்கப்பட்டு அன்று மாலை விடுவிக்கப்பட்டனர். ஆனால், தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை கலையரங்கை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி 60-க்கும் மேற்பட்டோர் விடிய விடிய கலையரங்கில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். மேலும் கலையரங்கை விட்டு வெளியேறாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கோகுல்ராஜ் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் காவல் துறையை கண்டித்து, நேற்று சேலம் அரசு மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தேசம் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

மேற்கு மண்டல ஐஜி விசாரணை

மாணவர் கோகுல்ராஜ் உடலை பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், மாணவர் இறந்து கிடந்த ரயில்வே தண்டவாளம் மற்றும் திருச்செங்கோடு மலைக்கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். திருச்செங்கோடு மலைக்கோயில் சிசி டிவி கேமராவில் பதிவான காட்சிகளையும், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, கடந்த 23-ம் தேதி காலை மாணவர் கோகுல்ராஜ், தனது கல்லூரி தோழியுடன் மலைக்கோயிலுக்கு வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், இருவரும் வெளியே செல்லும்போது, அவர்களை பின் தொடர்ந்து சிலர் வெளியே சென்றுள்ளனர். வீடியோவில் பதிவான அந்த காட்சிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர். செந்தில்குமார் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று கோவை மேற்கு மண்டல ஐஜி சங்கர், சேலம் சரக டிஐஜி வித்யாகுல்கர்னி ஆகியோர் கொண்ட காவல் துறை அதிகாரிகள் பள்ளிபாளையத்தில் மாணவர் இறந்து கிடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x