Published : 24 Jun 2015 08:03 AM
Last Updated : 24 Jun 2015 08:03 AM

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: முக்கிய சாட்சிகளிடம் ஆந்திர புலனாய்வு குழு விசாரணை - மதுரையில் 2-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள முக்கிய சாட்சிகளிடம் ஆந்திர சிறப்பு புலனாய்வு குழு வினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி, 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர சிறப்பு போலீஸார் கடந்த ஏப். 7-ம் தேதி சுட்டுக் கொன்றனர். அவர்களது உடலில் வெட்டுக்காயம் இருந்ததால் சிபிஐ விசாரணை கேட்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், பஸ்ஸில் பயணம் செய்த தமிழக கூலி தொழி லாளர்களை பிடித்துச் சென்று ஆந்திர சிறப்பு போலீஸார் சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந் தது. இதை உறுதிப்படுத்தும் வகை யில், திருவண்ணாமலை மாவட் டம் போளூர் அருகேயுள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (55), மேல்கணவாய்னூர் கிராமத் தைச் சேர்ந்த இளங்கோ (22), தருமபுரி மாவட்டம் சித்தேரியைச் சேர்ந்தவரும், துப்பாக்கிச் சூட்டில் பலியான ஹரிகிருஷ்ணன் மகனு மான பாலசந்தர் (29) ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன் ஆஜராகி, ஆந்திர போலீஸார் தமிழர்களை பஸ்ஸில் இருந்து பிடித்துச் சென்றதை பார்த்ததாக வாக்குமூலம் அளித் தனர். அதன்பின் இவர்கள் மூவ ரும் மதுரை மக்கள் கண்காணிப் பகத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஆந்திர அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று மதுரை வந்தனர். டிஐஜி ரமணகுமார் தலைமையில், எஸ்.பி. பால ராஜு, ஏஎஸ்பி சந்திரசேகர், டிஎஸ் பிக்கள் யுகந்தர்பாபு, ரகு, இன்ஸ் பெக்டர்கள் மதுசூதனன், சந்திர சேகர், எஸ்.ஐ ராஜு ஆகிய 8 பேர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

மக்கள் கண்காணிப்பக அலுவ லகத்தில் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாட்சிகளான இளங்கோ, சேகர், பாலச்சந்தர் மற்றும் இவர்களை தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்படுத்திய மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும் என டிஐஜி ரமணகுமார் கூறினார். ஆனால் மக்கள் கண்காணிப் பகத்தினர் இதை ஏற்க மறுத்து, விசாரணையின்போது வழக்கறிஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படாததால், மாலை 5.30 மணிவரை விசாரணை தொடங்கவில்லை. தமிழக அரசின் பிரதிநிதியாக இடம்பெற்றிருந்த மதுரை ஆர்டிஓ செந்தில்குமாரி இருதரப்பினரிடமும் பேச்சு நடத்தி னார். அப்போது வழக்கறிஞர் உடனிருக்க குழுவினர் ஒத்துக் கொண்டனர்.

இதுபற்றி டி.ஐ.ஜி. ரமணகுமார் கூறும்போது, சேஷாசலம் வனப் பகுதியில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை எத்தனை நாள் நடக்கும் என்பதை சொல்ல முடியாது என்றார். சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை உங்களுக்கு கிடைத்துவிட்டதா என கேட்டதற்கு, நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை நடப்பதால் அதுபற்றி இப்போது கூற முடியாது என டிஐஜி பதிலளித்தார்.

2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x