Published : 27 Jun 2015 09:16 AM
Last Updated : 27 Jun 2015 09:16 AM
டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி தவமணி காணாமல் போய் 8 மாதங்களாகியும், அவரை பிடிக்க முடியாமல் தமிழக போலீஸார் திணறிவருகின்றனர்.
தேர்வுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் வெளியான விவகாரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. அதிக தொகைக்கு வினாத்தாள் விற்கப்பட்ட மோசடி பல ஆண்டுகளாக நடந்திருக்கிறது என்றும், இதில் அதிகாரிகள் உட்பட பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் தெரியவந்தது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் தவமணி. கடலூர் மாவட்டம் பத்திராக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம் கார் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்தவர், பல முறைகேடுகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தவமணி, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து தப்ப முயன்றதால் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையில், மகாராஷ்டிர மாநிலம் புனே நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கில் தவமணியை ஆயுதப்படை போலீஸார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஜர்படுத்தினர். பிறகு, திருச்சிக்கு திரும்பும் வழியில், நவம்பர் 27-ம் தேதி கர்நாடக மாநிலம் குல்பர்கா ரயில் நிலையம் அருகே தவமணி திடீரென காணாமல் போனார்.
தவமணி தப்பிச் செல்ல உதவியதாக 4 சிறைக் காவலர்கள், 5 ஆயுதப்படை போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தன்னுடன் பாதுகாப்புக்கு வந்த எஸ்ஐ உட்பட 5 ஆயுதப்படை போலீஸாருக்கும், ரயில் நிலையத்தில் இருந்து தன்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற மயிலாடுதுறை கும்பலுக்கும் தவமணி பல லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு உதவி ஆணையர் அருள் அமரன் தலைமையிலான தனிப்படையினர் தவமணியை தொடர்ந்து தேடி வருகின்றனர். 8 மாதங்களாகியும் அவரை பிடிக்க முடியவில்லை. இதுபற்றி, ‘தி இந்து’விடம் உதவி ஆணையர் அருள் அமரன் கூறியதாவது:
தவமணியின் மனைவி செல்வியும் தலைமறைவாக இருக்கிறார். அவர்களைப் பற்றி மாநிலம் முழுவதும் துண்டுப் பிரசுரம் விநியோகித்து, தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களிடமும் கேட்டுள்ளோம். தவமணி பெயரில் சிறிய வீடு தவிர வேறு சொத்துகள் இல்லை. விரைவில் தவமணி பிடிபடுவார். இவ்வாறு அருள் அமரன் கூறினார்.
பல்வேறு இடங்களில் தவமணி பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் பணத்தை கண்டுபிடிப்பதிலும் போலீஸார் அதிக அக்கறை காட்டிவருகின்றனர். தவமணிக்கு பல மாநிலங்களில் கூட்டாளிகள் உள்ளனர். போலீஸார், அரசியல்வாதிகள் வட்டாரத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. எனவே, தவமணி வெளிநாடு தப்பிச் சென்றிருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT