Published : 25 Jun 2015 08:24 AM
Last Updated : 25 Jun 2015 08:24 AM

சென்னையில் 10 கிலோ தங்கத்தை கொள்ளையடிக்க முயற்சி: 5 பேர் சிக்கினர், 3 பேருக்கு வலை

காரில் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 10 கிலோ தங்கத்தை கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரிகள் தங்கக் கட்டிகளை மும்பைக்கு அனுப்பி, அங்கு நகைகளாக செய்து பின்னர் சென்னை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவில் ஜெய் மாதாஜி கூரியர் நிறுவனத்தில் இருந்து மும்பைக்கு விமானத்தில் 10 கிலோ தங்கம் அனுப்ப ஏற்பாடுகள் நடந்தன. இரவு 11 மணியளவில் தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சலை எடுத்துக் கொண்டு காரில் சென்னை விமான நிலையத்துக்கு புறப் பட்டனர். வீரேந்தர் (27) காரை ஓட்ட, பின்னால் ரத்தன் (22), சந்தீப் ஆகியோர் இருந்தனர். சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அருகே சென்றபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் காரை முந்திச் சென்று வழி மறித்து நிறுத்தினர்.

காரை ஓட்டி வந்த வீரேந்தர் என்ன நடக்கிறது என்பதை யோசிப்பதற்குள், குழந்தையை இடித்துவிட்டு நிற்காமல் செல்கிறாயா என 6 பேரும் சேர்ந்து அவரை அடித்தனர். நடுரோட்டில் நடந்த சம்பவத்தை பார்த்து அருகே இருந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவர்களை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது காரில் இருந்த தங்கக் கட்டி பார்சலை எடுக்க 2 பேர் முயற்சி செய்தனர். அதன்பின்னர்தான் வந்திருப்பது கொள்ளை கும்பல் என்பதை வீரேந்தர் புரிந்துகொண்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு(100) போனில் தொடர்பு கொண்டு கூறினார். அருகிலேயே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சைதாப்பேட்டை போலீஸார் சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

போலீஸ் வருவதைப் பார்த் ததும் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 6 பேரும் மோட்டார் சைக்கிள்களை போட்டுவிட்டு தப்பி ஓடினர். தங்கத்துக்கு பாதுகாப்பாக வந்த கூரியர் நிறுவன ஊழியர் சந்தீப்பும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீஸார் அவர்களை விரட்டிச் சென்றதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். விசாரணையில் அவர் சூளைமேட்டை சேர்ந்த செந்தில் குமார்(29) என்பது தெரிந்தது. விசாரணையில் செந்தில்குமார் கூறியதாவது:

கூரியர் நிறுவன ஊழியர் சந்தீப், பாரிமுனையை சேர்ந்த அகமது என்ற கவுசில், வடபழனி செல்வகுமார் (21), சூளைமேடு அசோக்குமார் (34), கோடம் பாக்கம் பிரசாத் (30), தாம்பரம் மணிகண்டன், டக்ளஸ் ஆகியோர் எனது நண்பர்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்து வோம். சீக்கிரமாக பணக்காரர் களாக ஆசைப்பட்டு பல்வேறு வழிகளை யோசித்தோம். அப்போது கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் சந்தீப், தமது நிறுவனம் மூலம் தங்கக் கட்டிகள் அனுப்பப்படும் விவரங்களை கூற, அவற்றை கொள்ளையடிக்க திட்டமிட்டோம். அகமது கவுசில் தான் இதற்கான திட்டங்களை எங்களுக்கு போட்டுக்கொடுத்தார்.

திட்டமிட்டபடி காரின் நம்பர், புறப்படும் நேரம், காரை ஓட்டுவது யார், தங்கக் கட்டி எதில் வைக்கப் பட்டுள்ளது என அனைத்து தகவல் களையும் சந்தீப் துல்லியமாக கூறிவிட்டார். நாங்கள் திட்டமிட்ட படியே எல்லாம் நடந்தது. ஆனால் போலீஸார் சீக்கிரமாக வந்ததால் எல்லாம் மாறிவிட்டது என்று செந்தில்குமார் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி தப்பி ஓடிய செல்வகுமார், அசோக் குமார், பிரசாத், மணிகண்டன் ஆகிய 4 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சந்தீப், அகமது, டக்ளஸ் ஆகியோரை தேடிவரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x