Last Updated : 30 Jun, 2015 04:08 PM

 

Published : 30 Jun 2015 04:08 PM
Last Updated : 30 Jun 2015 04:08 PM

20 வருடங்களுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாத மலைவாழ் கிராமம்

பொள்ளாச்சி அருகே முத்துமலைப்பதி பழங்குடி மக்கள் வீடுகளுக்கு 20 வருடங்களுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காத நிலை நீடிக்கிறது. வீதி வழியே மின் இணைப்பு சென்றாலும், வீடுகளுக்கு நீட்டிக்கப்படாததால், இங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்டது சொக்கனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் முத்துக்கவுண்டனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமலை திருமுருகன் கோயில் உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள முத்துமலை அடிவாரத்தில் முத்துமலைப்பதி என்ற பழங்குடி மக்கள் கிராமம் உள்ளது. இங்கு காலம் காலமாக வசிக்கும் பழங்குடி மக்கள், வன இடுபொருட்களை சேகரித்து விற்பது, விவசாயக் கூலித் தொழிலை மேற்கொள்வது என அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

முத்துமலைப்பதியில், கடந்த 2003-ம் ஆண்டு இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.32 ஆயிரம் மதிப்பீட்டில் 25 வீடுகளும், அதைத் தொடர்ந்து சமீபத்தில் கல்கொத்திப்பாறை என்ற இடத்தில் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் 10 தொகுப்பு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன. இன்றுவரை தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்தது மட்டுமே, இவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச வசதி. இதைத்தவிர அத்தியாவசியத் தேவைகளான பொதுக்கழிப்பிடம், மின்சார வசதி உள்ளிட்டவை இதுவரையிலும் செய்து கொடுக்கப்படவில்லை,

முத்துமலைப்பதியில் உள்ள 2 தெருக்களுக்கும் சேர்த்து 3 தெருவிளக்குகள் உள்ளன. பழங்குடி மக்கள் கூறும்போது, ‘வீதிக்கு மட்டுமே மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்துள்ளனர். வீடுகளில் மின்வசதி இல்லாததால் அரசின் விலையில்லா பொருட்கள் அனைத்துமே பயன்படாமல் கிடக்கின்றன. குழந்தைகள் இரவு நேரத்தில் படிக்க முடியாது. எத்தனையோ முன்னேற்றம் வந்துவிட்டாலும், அதையெல்லாம் பயன்படுத்த மின்சாரம் வேண்டுமே. ரேடியோ தான் எங்களுக்குள்ள ஒரே ஒரு பொழுதுபோக்கு’ என்கின்றனர்.

சேதமான வீடுகள்

தொகுப்பு வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்தே காணப்படுகின்றன. வீடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள், வனத்தினுள் வசிக்கும் இவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, முறையாக அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுத்து, வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க அரசுத்துறை அதிகாரிகள் முன் வரவேண்டும். இதுவே இந்த பழங்குடி மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

மழையால் சேதமடைந்து கிடக்கும் தொகுப்பு வீட்டின் கதவு. (அடுத்த படம்) வீதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள்.

ஆய்வு நடத்த உறுதி

இது குறித்து கிணத்துக்கடவு ஒன்றிய கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகுமார் கூறும்போது, ‘முத்துமலைப்பதியில் பழங்குடி மக்களுக்கான தொகுப்பு வீடுகள் கட்டியபோது, வீடுகளுக்கு ஏன் மின் இணைப்பு கொடுக்கவில்லை எனத் தெரியவில்லை. அந்த பகுதியில் நாளை (இன்று) சிறப்பு ஆய்வு செய்ய உள்ளோம். அதில் பழங்குடி மக்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றுத் தருவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, மின்வாரியத்திடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கான செலவுகளை ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் ஏற்க வாய்ப்புகள் உள்ளன’ என்றார்.

‘மின் திட்டம் முடிந்தது’

சொக்கனூர் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘மின்வாரியத்தில் ஒரு குடில், ஒரு விளக்கு திட்டம் இருந்தபோது, பழங்குடி மக்களின் தொகுப்பு வீடுகளுக்கு இலவச மின்விளக்கு பொருத்தப்பட்டது. ஆனால், அந்த திட்டம் 4 ஆண்டுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே தேவைப்படுவோர் தனியாக விண்ணப்பித்து மின் இணைப்பு பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. தொகுப்பு வீடுகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் அவை சேதமடைந்துள்ளன. பொதுக்கழிப்பிடம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கலாம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x