Published : 02 Jun 2015 08:03 AM
Last Updated : 02 Jun 2015 08:03 AM

‘தற்கொலை செய்துகொண்ட பொறியாளர் முத்துக்குமாரசாமி நேர்மையானவர்’: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல்

தற்கொலை செய்துகொண்ட பொறியாளர் முத்துக்குமாரசாமி நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றுள்ளார். அவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் மிரட்டியதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. எனவே, கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை வேளாண் உதவி பொறியாளர் முத்துக்குமாரசாமி, கடந்த பிப். 20-ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நெல்லை மாவட்டத்தில் வேளாண் துறையில் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட 7 பேரிடம் தலா ரூ.1.75 லட்சம் வீதம் பணம் வசூலித்து தருமாறு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் வற்புறுத்தியதால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருமுறை மனு தாக்கல் செய்தனர். அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 3-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், முத்துக்குமார சாமி தற்கொலை வழக்கில் சிபிசிஐடி மற்றும் ரயில்வே போலீஸாரின் விசாரணை முடிந்துவிட்டது. இனிமேலும் என்னிடம் விசாரணை நடத்த வேண்டியதில்லை. ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஏ.பி.பாலசுப்பிரமணியன், சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி எம்.பிரபாகரனின் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் இருவரும் கூட்டுச்சதி செய்து ஒரு ஓட்டுநர் பணியிடத்துக்கு ரூ.1.75 லட்சம் கேட்டு முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

தற்கொலை செய்யும் முன் முத்துக்குமாரசாமி பலரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் பேசிய நபர்கள் யாரென அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்து வருகிறோம். அந்த நபர்களைத் தவிர்த்து, முத்துக்குமாரசாமி தற்கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியதுள்ளது. இந்த வழக்கில் கீழ்நிலை ஊழியர்கள்தான் பிரதான சாட்சிகளாக உள்ளனர். கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

கிருஷ்ணமூர்த்தி சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். மேலும், முத்துக்குமாரசாமி நேர்மையான அதிகாரி என நற்பெயர் எடுத்துள்ளார். அவர் ஏன் தற்கொலை செய்ய வேண்டும். ஓட்டுநர் நியமனம் நடைபெற்ற சில நாட்களில் அவர் ஏன் இறக்க வேண்டும். இவற்றில் பல மர்மங்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து விசாரணையை புதன்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x