Published : 31 May 2014 10:23 AM
Last Updated : 31 May 2014 10:23 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 30,380 விண்ணப்பங்கள் விநியோகம்: ஜூன் 18-ல் கவுன்சலிங் தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்தி 380 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. ஜூன் 18-ம் தேதி கவுன்சலிங் நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 13 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சென்னையில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி, 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் 2014 - 2015-ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் 14-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடந்தது.

இதுவரை 30 ஆயிரத்தி 380 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. கடைசி நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 447 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் செயலாளர், தேர்வுக்குழு, 162, பெரியார் ஈ.வே.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:

மருத்துவப் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வமாக வந்து விண்ணப்பங்களை வாங்கிச் சென்றுள்ளனர். விண்ணப்ப விற்பனை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டது. 30 ஆயிரத்தி 380 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவரை 20 ஆயிரத்தி 662 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான கவுன்சலிங்கை ஜூன் 18-ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளோம். பிளஸ்-2 மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 10-ம் தேதி மதிப்பெண் பட்டியல் முடிவு வர உள்ளது. அந்த தேதியில் வந்துவிட்டால், ஜூன் 18-ம் தேதி கவுன்சலிங் அறிவித்தபடி நடக்கும். இவற்றில் ஏதாவது மாற்றம் இருந்தால், கவுன்சலிங் தேதியிலும் மாற்றம் இருக்கும். இல்லை என்றால், கவுன்சலிங் ஜூன் 18-ம் தேதி தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x