Published : 12 Jun 2015 08:32 AM
Last Updated : 12 Jun 2015 08:32 AM

இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளிக்க விருப்பம் உள்ளதா?- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு செய்ய விருப்பம் உள்ளதா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பிரியா என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அதில், இலங்கை தமிழ் அகதி என்ற காரணத்தால் ஆர்.நந்தினி என்ற மாணவி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நந்தினியின் தந்தை டி.ராஜா கடந்த 1990-ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்தார். நந்தினி அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து 1,200க்கு 1,170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அவரது கட் ஆஃப் மதிப்பெண் 197.5. ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கை தமிழ் அகதி நந்தினியை எம்.பி.பி.எஸ். மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், அவருக்காக ஒரு எம்.பி.பி.எஸ். இடத்தை ஒதுக்கவேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இம்மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி மத்திய அரசின் வெளியுறவுத் துறை, உள்துறை, மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார்.

அதில், இலங்கை உட்பட நட்புறவு நாடுகளுக்கென மருத்துவப் படிப்பின் சுய நிதித் திட்டத்தின் கீழ் சில இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், அந்த இடஒதுக்கீட்டில் அகதிகளின் வாரிசுகள் படிப்பதற்கு உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு ஏதேனும் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு விருப்பம் உள்ளதா என்பது குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x