Published : 12 Jun 2015 04:37 PM
Last Updated : 12 Jun 2015 04:37 PM

ரூ.94 கோடியில் மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் ரூ.94 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "நீலகிரி மாவட்டம் - உதகமண்டலத்தில் அமைந்துள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியின் சேவையை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் துவக்கி வைத்தார்.

மேலும் 80 கோடியே 92 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து, 5 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சி.டி. ஸ்கேன் கருவிகள், ஆப்ரேடிங் மைக்ரோஸ்கோப் கருவி மற்றும் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 ஆம்புலன்ஸ் சேவையினையும் துவக்கி வைத்தார்.

மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காக, தமிழ்நாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ளது போல் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நவீன உபகரண வசதிகள், மலைப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நீலகிரி மாவட்டம் - உதகமண்டலத்திலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியின் சேவையினை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்.

மேலும், நீலகிரி மாவட்டம் - குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் அரசு மருத்துவமனைகளில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள சி.டி ஸ்கேன் கருவிகள்; கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஆப்ரேடிங் மைக்ரோஸ்கோப் கருவி ஆகியவற்றின் சேவையை அவர் துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேனி, காஞ்சிபுரம், சேலம், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தஞ்சாவூர், ஈரோடு, அரியலூர், வேலூர், கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திண்டுக்கல், விருதுநகர், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 18 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.

44 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 7 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புகள்; 17 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 14 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்; 28 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 கோடியே 54 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு கட்டடங்கள்; 5 துணை சுகாதார நிலையங்களுக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியனவற்றையும் திறந்து வைத்தார்.

பொது சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கும் பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்திற்கு 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் மற்றும் குழந்தை நல திறன் மேம்பாட்டுக் கூடம்; தேனி மாவட்டம் - வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாய்மை மற்றும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி கட்டடம்; திருச்சிராப்பள்ளி, கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியில் 11 கோடியே 98 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தேர்வுக் கூடம், மருத்துவர்களுக்கான தங்கும் குடியிருப்புகள், பயிற்றுநர்கள் மற்றும் பணியாளர் குடியிருப்புகள்; திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்பு; கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆண்களுக்கான விடுதிக் கட்டடம்; திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நுண்கிருமியியல் ஆய்வுக் கூடம் மற்றும் பலதுறை ஆராய்ச்சி நிலையக் கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் - செய்யார், கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலம் மற்றும் கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனை, திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் - மயிலாடுதுறை, திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் மற்றும் பல்லடம், கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் 17 கோடியே 74 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, இருதயப் பிரிவு, மகப்பேறு பிரிவு போன்ற பிரிவுகளுக்கான கட்டடம், சிசு தீவிர சிகிச்சை மையம், ரத்த வங்கி, கூடுதல் வெளி நோயாளிகள் பிரிவு, இளம் சிசு தீவிர சிகிச்சை மையங்கள், தீக்காயப் பிரிவு, நஞ்சு சிகிச்சை மையம் ஆகிய கட்டடங்கள்; இந்திய முறை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டம் - கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயல்கூடக் கட்டடம்; என மொத்தம் 80 கோடியே 92 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து அவர்களின் உயிரை காப்பாற்றும் மகத்தான பணியை 108 கட்டணமில்லா ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் செய்து வருகிறது.

இந்த திட்டத்தில் தற்போது 726 ஆம்புலன்ஸ் ஊர்திகள் இயக்கப்படுகின்றன. இச்சேவையை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 25 ஆம்புலன்ஸ் ஊர்திகளை வழங்கும் அடையாளமாக 2 ஓட்டுநர்களுக்கு வாகனத்திற்கான சாவிகளை முதல்வர் இன்று வழங்கி 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் இணைத்து அதன் சேவையை துவக்கி வைத்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x