Published : 02 Jun 2015 09:55 PM
Last Updated : 02 Jun 2015 09:55 PM

14 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களையும் இலங்கை வசம் உள்ள 18 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடித விவரம் வருமாறு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று படகுகளில் 14 தமிழக மீனவர்கள் கடந்த 1-ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர்.

ஏற்கெனவே தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 18 மீன்பிடி படகுகள் இன்றுவரை இலங்கை கட்டுப்பாட்டில் உள்ளன. படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் ஏழை மீனவர்களுக்கு மிகவும் இன்றியமையாதவை. பல நாட்களாக பயன்படுத்தப்படாமல் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் அழிந்துவிட்டதால், மீனவர்களுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவு அருகில் மீன் பிடிக்கக் கூடாது என்று மிரட்டுவதற்காக தற்போது ஒன்றுமறியாத தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்தும் விதமாகவும், ராமேஸ்வரம் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாக் ஜலசந்தியில் ஏற்படும் நெருக்கடியை குறைக்க முடியும். தமிழக அரசு சார்பில் மத்திய வேளாண்மை துறைக்கு இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

இந்த பிரச்சினையில் நிலையான முடிவு கிடைக்கும் விதமாக இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, நடந்துள்ளது. இருப்பினும் மீனவர்கள் பிடித்துச் செல்லப்படுவது தொடர்கிறது.

இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். எனவே, நீங்கள் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்டு 14 மீனவர்கள் மற்றும் 18 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x