Published : 03 Jun 2015 10:39 AM
Last Updated : 03 Jun 2015 10:39 AM

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: ஜூலை 1 முதல் கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதுவரை 3,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் (டயட்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களி லும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கடந்த மே 14-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப் பங்களை விண்ணப்பம் வாங்கிய இடத்தில் சமர்ப்பிக்க நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இடைநிலை ஆசிரியர் பயிற் சிக்கு இதுவரை 3,500 பேர் விண்ணப்பத்திருப்பதாகவும் மாவட்ட அளவிலான கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி நடத்தப்படும் என்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

தற்போது அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பதிவுமூப்பு அடிப்படையில் இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண், ஆசிரியர் பயிற்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) மதிப்பெண் அடிப்படையிலே (வெயிட்டேஜ் மார்க் முறை) நியமிக்கப்படுகிறார்கள். எனவே, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள், இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து நல்ல மதிப்பெண் பெற்று டெட் தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு அரசு பணி வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x