Published : 29 Jun 2015 07:14 AM
Last Updated : 29 Jun 2015 07:14 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து முதலாம் ஆண்டு நினைவு தினம்: பலியான 61 தொழிலாளருக்கு அஞ்சலி - கட்டுமான பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக கடைபிடிப்பு

சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் மவுலிவாக்கம் கட்டிட விபத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை கட்டுமான பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக நேற்று கடைபிடித்தனர்.

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர். சென்னை கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் இச்சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் நேற்று நடைபெற்றது. இத்தினத்தை அவர்கள் கட்டுமான பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக கடைபிடித்தனர்.

அப்போது அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்துடன் மெழுகுவர்த்தி ஏற்றி வந்து, அச்சம்பவத்தில் இறந்தோர் படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, அனைத்து பொறியாளர்களும், தங்களது பணியை கடமை தவறாது செய்வது என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறியதாவது:

மவுலிவாக்கம் விபத்து நாட்டின் அவமானச் சின்னமாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வு ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் 5 ஆண்டு அனுபவம் வாய்ந்த பொறியாளர்களைக் கொண்டே கட்டிடங்களைக் கட்ட வேண்டும். கட்டிடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கட்டுமானப் பொறியாளர் கவுன்சிலை அமைக்க வேண்டும். அதில் 5 ஆண்டு அனுபவம் உள்ளவரை மட்டுமே உறுப்பினராக்க வேண்டும். போலி பொறியாளர்களை கைது செய்ய வேண்டும். கட்டுமான பொறியாளர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டும். சிஎம்டிஏ-வில் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

சங்கத்தின் தலைவர் ஆர்.பாலமுருகன், செயலர் பி.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x